கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு ரூ.81 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
நவம்பர் 11ஆம் தேதி டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு தொகுப்பு நிதியாக ரூ.81.015 கோடி மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் மாநில முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
அந்த அரசாணையில், ‘தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 78,263 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த தென்னை மரங்களில் 66.68 லட்சம் மரங்கள் கஜா புயலால் சாய்ந்துள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தற்போது 35 லட்சம் தென்னை மரக் கன்றுகள் வாங்கப்படவுள்ளன. இதற்கு ரூ.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கன்றுகளுக்கு சொட்டு நீர்ப் பாசன வசதிகளை அளிக்க ரூ.43.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தென்னை வளர்ந்து பலன் தர 5 ஆண்டுகள் ஆகுமென்பதால், இடைப்பட்ட காலத்தில் விவசாயிகளின் வருவாயை உறுதிசெய்ய கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், குதிரைவாலி, தினை மற்றும் பருப்பு வகைகளைப் பயிரிட ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பயிர்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post