ஜெயலலிதா மரணம் குறித்து போலீஸ் விசாரிக்க வேண்டுமென வலியுறுத்திய அமைச்சர் சி.வி.சண்முகம், டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்துப் பேசியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், இதுதொடர்பாக போலீஸ் விசாரணை வேண்டுமெனவும், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் ஆகியோரை விசாரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரும் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று காலை (ஜனவரி 1) சென்னையிலிருந்து விமானம் மூலம் சி.வி.சண்முகம் டெல்லி சென்றார். அங்கு அதிமுக எம்.பி.க்கள் அருண் மொழித் தேவன், கோ.அரி உள்ளிட்டோர் சகிதம் மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை நேரில் சந்தித்த அவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை கோரியிருக்கும் அமைச்சர், திடீரென மத்திய சட்ட அமைச்சரை சந்தித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க மனு அளித்திருக்கிறார் என்று கூறப்பட்டாலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும், தனிப்பட்ட முறையில் இந்த கோரிக்கையை சி.வி.சண்முகம் வைத்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post