புத்தாண்டு நாளில் உலகளவில் அதிக குழந்தைகள் பிறந்த நாடாக இந்தியா இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
21ஆம் நூற்றாண்டில் உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஐநா ஏற்கெனவே கணித்திருந்தது. இந்த கணிப்பு விரைவில் உண்மையாகிவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. ஐநா திரட்டி வெளியிட்டுள்ள தகவல்களின்படி, புத்தாண்டு தினத்தில் மட்டும் இந்தியாவில் 69,944 குழந்தைகள் பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவில் 44,940 குழந்தைகளும், நைஜீரியாவில் 25,685 குழந்தைகளும் பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் பிறக்கும் ஒட்டுமொத்த குழந்தைகளில் 18 விழுக்காடு இந்தியாவில் பிறக்கின்றன.
இதுபற்றி யுனிசெஃப் அமைப்பின் இந்திய பிரதிநிதியான யாஸ்மின் அலி ஹக் பேசுகையில், ”இந்த புத்தாண்டு தினத்தில், ஒவ்வொரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தையின் உரிமைகளை பூர்த்தி செய்ய நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம்” என்று கூறினார். புதிதாக பிறக்கும் குழந்தைகளின் நலனை உறுதி செய்வதற்காக அனைத்து உள்ளூர் மருத்துவ பணியாளர்களுக்கும் போதிய பயிற்சியளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், ஐநாவின் தகவல்படி, புத்தாண்டு நாளில் பாகிஸ்தானில் 15,112 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13,256 குழந்தைகளும், அமெரிக்காவில் 1,086 குழந்தைகளும், காங்கோவில் 10,053 குழந்தைகளும், வங்கதேசத்தில் 8,428 குழந்தைகளும் பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
130 கோடி மக்கள் தொகையுடன் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ஐநா மதிப்பீட்டின் படி, 2024ஆம் ஆண்டுக்குள் சீனாவை இந்தியா முந்திவிடும் என தெரிகிறது.
Discussion about this post