புத்தாண்டை முன்னிட்டு கலைஞரின் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
உலகம் முழுவதும் 2019 ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. நேற்று நள்ளிரவு முதல் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், கோயில்களில் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டு வருகிறது. நள்ளிரவு 12 மணியளவில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் கூடிய இளைஞர்கள், உற்சாக முழக்கங்கள் எழுப்பி, புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஜனவரி 1) காலை சென்னை மெரினா கடற்கரைக்கு குடும்பத்தினருடன் வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள அண்ணா நினைவிடத்திற்கும் மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு வந்திருந்த மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், அவரது உடல் நிலை குறித்தும் விசாரித்தார்.
முன்னதாக ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள ஸ்டாலின் இல்லத்துக்குச் சென்ற திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post