புத்தாண்டை முன்னிட்டு காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை எடுத்த நடவடிக்கையினால் இந்த ஆண்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடுவதாகக் கருதி நேற்று நள்ளிரவில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் கண் மூடித்தனமாக விரைந்து சென்றனர். இதற்கிடையே பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 38 இடங்களில் விபத்து ஏற்படும் பகுதி என கண்டறியப்பட்டு அங்கு தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டன. எனினும் மாநகரில் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதால், சறுக்கி கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் 100க்கும்மேற்பட்டோர் காயமடைந்து, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலை, தரமணி வேளச்சேரி, பார்த்தசாரதி மேம்பாலம்ஆகிய இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் அவசர பிரிவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 50 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post