அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்னது அவருடைய தனிப்பட்ட கருத்து எனத் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி காலை விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு நடந்ததைத் தடுத்து நிறுத்தியது யார் என்றும், இதன் பின்னால் சுகாதாரத் துறை செயலாளருக்கு என்ன பங்கு என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். அதுபோன்று முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவையும் விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று (ஜனவரி 1) மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தைச் சந்தித்துப் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பின்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டுமெனக் கோரிக்கை மனு அளித்திருந்தாலும், ஜெ மரணம் தொடர்பாகவும் விவாதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “கூட்டணி அமைத்து போட்டி இட்டாலும், தனித்து களம் இறங்கினாலும் திருவாரூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி” என்று குறிப்பிட்டார்.
Discussion about this post