2018-19 நிதியாண்டு முடிவடைவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில் தமிழக அரசு மதிப்பிட்டிருந்த வருவாய் பற்றாக்குறையில் இப்போதே 98 விழுக்காட்டை எட்டியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் ரூ.19,200 கோடி வருவாய் பற்றாக்குறையை தமிழக அரசு எதிர்கொள்ளும் என்று பட்ஜெட் தாக்கலின்போது மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழக அரசின் இலக்கைக் காட்டிலும் மிக அதிகமான வேகத்தில் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டுள்ளது. நவம்பர் மாத இறுதியிலேயே தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.18,759 கோடியாக அதிகரித்துள்ளது. இது இந்த நிதியாண்டுக்கு அரசு நிர்ணயித்திருந்த மதிப்பீட்டில் 98 விழுக்காடாகும்.
இந்த நிதியாண்டில் இன்னும் நான்கு மாதங்கள் எஞ்சியிருப்பதால் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. வருவாய் பற்றாக்குறை அதிகரித்திருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் ஜிஎஸ்டி வருவாயின் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.29,748.5 கோடி கிடைக்குமென்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதில் 25,666.1 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது தமிழக அரசின் எதிர்பார்ப்பில் 86 விழுக்காடு மட்டுமே.
பதிவு – முத்திரை வரி வருவாய் மூலமாக ரூ.10,935.5 கோடி கிடைக்குமென்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.7,242.28 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது தமிழக அரசின் எதிர்பார்ப்பில் 66.2 விழுக்காடு மட்டுமே. நில வருவாய் மூலமாக ரூ.282.4 கோடி கிடைக்குமென்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதில் ரூ.100.8 கோடி மட்டுமே ஈட்டப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் எதிர்பார்ப்பில் 35.7 விழுக்காடு மட்டுமே. மதிப்புக் கூட்டு வரிகளின் மூலமாக ரூ.44,427 கோடி ஈட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.27,434.3 கோடி மட்டுமே ஈட்டப்பட்டுள்ளது. இது 61.8 விழுக்காடு மட்டுமேயாகும்.
அதேபோல சுங்க வரி மூலமாக 6,998 கோடி ஈட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் ரூ.4,450 கோடி (63.7 %) மட்டுமே ஈட்டப்பட்டுள்ளது. ஒன்றிய வரிகளின் பங்கீட்டிலிருந்து ரூ.31,707 கோடி கிடைக்குமென்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் ரூ.17,380 கோடி (54.8 %) மட்டுமே கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் ரூ.1,76,252 கோடி வருவாய் ஈட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டு, அதைவிட 58.6 விழுக்காடு குறைவாக ரூ.1,03,315.5 கோடி மட்டுமே தமிழக அரசு வருவாயாக ஈட்டியுள்ளது.
வருவாய் குறைந்திருக்கும் வேளையில் செலவுகள் அதிகரித்துள்ளதும் மாநில அரசுக்குச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு நடப்பு பட்ஜெட்டுக்கு ஒதுக்கிய தொகையில் இதுவரையில் 74.4 விழுக்காடு செலவாகியுள்ளது. மழை, வெள்ள பாதிப்பால் பட்ஜெட் செலவுகள் வெகுவாக அதிகரித்துள்ளன. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததைக் காரணமாகக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை ஒன்றிய அரசு உரிய காலத்தில் இன்னும் ஒதுக்காமல் இருப்பதும், முந்தைய ஆண்டைக் காட்டிலும் நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய்கள் குறைந்திருப்பதும் வருவாய் பற்றாக்குறை உயர்வுக்கு மற்ற காரணங்களாக உள்ளன. நடப்பு நிதியாண்டில் இன்னும் நான்கு மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில் தமிழ்நாடு வருவாய்ப் பற்றாக்குறை மதிப்பீட்டில் 98 விழுக்காட்டை அதற்குள்ளாக எட்டியிருப்பதற்கு இவையே காரணமாக உள்ளது.
..
Discussion about this post