திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளோடு, திமுக தலைவர் ஸ்டாலின் தனது இல்லத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் மறைவால் காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதிக்கு, வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலைச் சந்திக்க திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தொடக்கப் பணிகளை ஆரம்பித்துவிட்டன. வரும் 4ஆம் தேதி வேட்பாளரை அறிவிப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில், நேற்று (ஜனவரி 1) திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆலோசனையில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஐ.பெரியசாமி, கனிமொழி, அர.சக்கரபாணி உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதில், மாவட்டச் செயலாளரான பூண்டி கலைவாணன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் வேட்பாளருக்குப் பரிசீலிக்கப்பட்டுள்ளதாம். திருவாரூர் தொகுதியில் பிள்ளைமார் சமூகத்தினர் கணிசமாக இருக்கிறார்கள், அதையடுத்து தலித்துகள் உள்ளனர். இதனால் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்.பிள்ளை கல்விக் குழுமங்களின் அதிபரின் பெயரும் இடைத்தேர்தல் வேட்பாளருக்கான பரிசீலனையில் இருக்கிறதாம்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை இருப்பதால் அதுதொடர்பாகவும் ஆலோசனை நடத்தினோம் என்று தெரிவித்தார். ஸ்டாலின் போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளதே என்ற கேள்விக்கு, “ ஸ்டாலின் போட்டியிடுவது வெறும் தகவல்தானே தவிர, உங்களிடம் அவர் போட்டியிடுகிறார் என்று நாங்கள் யாராவது கூறினோமா? கட்சியின் நிர்வாகக் குழு செயற்குழுதான் வேட்பாளரை முடிவு செய்யும்” என்று பதிலளித்தார்.
..
Discussion about this post