பிப்ரவரி 12 – 2017 அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு!
விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து லட்சுமணன் விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய மாவட்டச் செயலாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குக் கழக தொண்டர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
டிசம்பர் 24 – 2018 அதிமுக தலைமைக் கழக அறிவிப்பு
விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் லட்சுமணன் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு அமைப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்குச் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நியமிக்கப்படுகிறார்.
விழுப்புரம் மாவட்டத்திலும் புதுச்சேரியிலும் பிரபலமான ஆர்த்தோ டாக்டர்தான் லட்சுமணன். பெரிய பண்ணையார் குடும்பம். வன்னியர் சமுதாயம். நேர்மையானவர் என்று கட்சியினரிடத்திலும், பொதுமக்களிடத்திலும் பெயர் எடுத்தவர். திமுகவினர் கூட பலர் இவரிடம் வந்து முறிந்துபோன எலும்புகளை சிகிச்சை மூலம் சேர வைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.
அதிமுகவின் மாநில மருத்துவ அணியில் சிறப்பாகச் செயல்பட்ட லட்சுமணனுக்கு ஜெயலலிதா கட்சிக்குள் அறிவிக்கப்படாத சில பணிகளைக் கொடுத்தார். அதை செவ்வனே செய்து முடித்ததால் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடித்தார் லட்சுமணன்.
2011ஆம் ஆண்டு தேர்தல் முடிந்ததும் அமைச்சர் ஆன சி.வி.சண்முகத்தைச் சில காலத்தில் அமைச்சர் பதவியில் இருந்தும், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கிய ஜெயலலிதா லட்சுமணனை விழுப்புரம் மாவட்டச் செயலாளராகவும், அடுத்து ராஜ்ய சபா எம்.பி.யாகவும் ஆக்கினார்.
ஓ.பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்தியபோது விழுப்புரம் மாவட்டத்தில் அதைத் தலைமையேற்று நடத்தியவர்தான் இந்த லட்சுமணன். மற்ற மாவட்டங்களை விட விழுப்புரத்தில் தொண்டர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் டாக்டரை பாராட்டித் தள்ளினார் ஓ.பன்னீர். அப்போது பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவால் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் லட்சுமணன். அதன்பின் அணிகள் இணைந்ததும், மீண்டும் அம்மாவின் நியமனங்களை அமல்படுத்துகிறோம் என்று சொல்லி லட்சுமணனை மாவட்டச் செயலாளர் ஆக்கினார்கள். அவரைத்தான் இப்போது நீக்கிவிட்டு, சி.வி.சண்முகத்தை மாவட்டச் செயலாளர் ஆக்கியிருக்கிறார்கள்.
லட்சுமணன் சசிகலாவை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்தியவர். சி.வி.சண்முகமோ போயஸ் கார்டன் வாசலில் நின்றபடியே, ‘சின்ன்ன்ம்மா… அம்மா’ என்று சசிகலாவுக்கு உரக்க ஆதரவு கொடுத்தவர். “இப்போது பன்னீரின் ஆதரவாளர் என்பதால் லட்சுமணன் நீக்கப்பட்டிருக்கிறார். பதிலுக்கு அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கியிருக்கிறார்கள். அமைப்புச் செயலாளர் என்பது அதிமுகவில் பதவி இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகக் கொடுக்கப்படும் ஒரு முலாம் பதவி. யாருக்காக தர்மயுத்தம் நடத்தினாரோ அந்த பன்னீர்தான் லட்சுமணனின் விடுவிப்பு உத்தரவிலும் கையொப்பமிட்டிருக்கிறார். மீண்டும் விழுப்புரத்தை தன் கைக்குள் கொண்டு வந்திருக்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம்.
கொஞ்சம் கொஞ்சமாக ஓ.பன்னீரின் ஆதரவு மா.செ.க்களை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவர்களைத் தேர்தலின்போது வேட்பாளர் தேர்வில் பங்கு வகிக்காதவர்களாக மாற்றுவதுதான் எடப்பாடியின் பிளான். அதன் ஒரு பகுதியே ஓ.பன்னீரின் ஆதரவு மாவட்டமான விழுப்புரம் லட்சுமணன் அகற்றப்பட்டிருக்கிறார். இதற்கு ஓ.பன்னீரும் கையெழுத்து போட்டிருப்பதுதான் இந்த இயக்கத்தின் தலையெழுத்து” என்கிறார்கள் விழுப்புரம் தர்மயுத்தத்தில் கலந்துகொண்ட லட்சுமணனின் ஆதரவாளர்கள்.
விழுப்புரத்தில் இப்படி என்றால் கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமியின் ஆதரவாளர் ஒருவர் மாவட்டச் செயலாளர் ஆகியிருக்கிறார். விழுப்புரம் ஃபார்முலா இங்கே பொருந்தாதா என்று நீங்கள் கேட்கலாம். இதே கேள்வியை கிருஷ்ணகிரியில் கேட்டால், “இங்கே நடந்த மாற்றத்துக்காக கே.பி.முனுசாமிதான் போராடினார். ஓபிஎஸ் எங்கே போராடினார்?” என்று பதில் சொல்கிறார்கள்.
அட….
Discussion about this post