டிசம்பர் மாதத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் சரிவைக் கண்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சகம் ஜனவரி 1ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2018ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.94,726 கோடியாகச் சரிந்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.16,442 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.22,459 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.47,936 கோடியும் வசூலாகியுள்ளது. அதுமட்டுமின்றி செஸ் வரி ரூ.7,888 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 72.44 லட்சம் பேர் டிசம்பர் 30 வரையில் ஜிஎஸ்டிஆர்-3பி தாக்கல் செய்துள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டியில் ரூ.1 லட்சம் கோடி இலக்கை எட்ட வேண்டுமென்று இலக்கு நிர்ணயித்துள்ள ஒன்றிய அரசுக்கு டிசம்பர் மாத வரி வசூல் கலக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. முந்தைய நவம்பர் மாதத்தில் ரூ.97,637 கோடி வசூலாகியிருந்த நிலையில் அதைவிடக் குறைவாகவே டிசம்பரில் வசூலாகியுள்ளது. 2018ஆம் ஆண்டின் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களுக்கான மாநிலங்களின் இழப்பீட்டுத் தொகையாக ரூ.11,922 கோடியை ஒன்றிய அரசு வழங்கியிருப்பதாகவும் நிதியமைச்சகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ‘டிசம்பர் மாதத்துக்கான மத்திய ஜிஎஸ்டியில் ரூ.18,409 கோடியும், மாநில ஜிஎஸ்டியில் ரூ.14,793 கோடியும் செட்டில் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான மாத செட்டில்மென்ட்டுக்குப் பிறகு ஒன்றிய அரசு ரூ.43,851 கோடியும், மாநில அரசுகள் ரூ.46,252 கோடியும் வரி வருவாய் ஈட்டியுள்ளன’ என்றும் நிதியமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post