கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம் என ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி வந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இதனால் கேரளாவில் கலவரம், வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டன. சமீபத்தில் சபரிமலைக்குச் சென்ற சென்னையைச் சேர்ந்த 11 பேரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
வழிபாட்டில் சீர்திருத்தங்களை ஏற்க வேண்டும் என்று கூறி ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தி கேரள அரசு ‘வனிதா மதில்’ என்ற பெயரில் மகளிர் மனித சுவர் அமைக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, நேற்று மாலை 4.30 மணியளவில், மனித சுவர் அமைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
வடகேரளத்தின் காசர்கோட்டிலிருந்து திருவனந்தபுரம் வரை 608 கி.மீ. தொலைவுக்கு 14 மாவட்டங்களிலும் பெண்கள் வரிசையாக ஒருவருடன் ஒருவர் கைகோத்து நின்று மனிதச் சுவரை அமைத்தனர். இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 31 லட்சம் பெண்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் பிருந்தா காரத், சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். “சாதி மதம் ஆகியவற்றைத் தகர்த்தெறிந்து கேரளாவை இருளில் இருந்து எடுத்துச் செல்வதற்காக இந்த மகளிர் சுவர் நிகழ்வு” என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதற்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. எனினும் காசர்கோடு பகுதியில் பெண்கள்மீது கல் வீச்சு தாக்குதல் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரத்தில் சுவாமி அக்னிவேஷ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களைச் சந்தித்து பேசினார்.
Discussion about this post