உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முதல்முறையாக ஐம்பது வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்ததையடுத்து, கோயில் நடை மூடப்பட்டது.
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய உத்தரவை எதிர்த்து கேரளாவில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து பல்வேறு விதங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் கேரளாவில் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து(44) என்பவரும், மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா(42) என்பவரும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயற்சித்து தோல்வி அடைந்தனர்.
இந்நிலையில், பிந்துவும், கனகதுர்காவும் இன்று(ஜனவரி 1) அதிகாலை 3.45 மணியளவில் சபரிமலை ஐயப்பனைத் தரிசனம் செய்துள்ளனர். காவல் துறையினரின் அனுமதியுடன்,பாதுகாப்புடனும் சென்றுள்ளனர். இவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து, பதினெட்டாம் படி வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்றுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிந்து கூறுகையில், “நாங்கள் இரண்டாவது முறையாக சபரிமலை வந்துள்ளோம். ஆனால், இம்முறை ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டோம். அதிகாலை 1.30 மணிக்கு பம்பைக்கு வந்தோம், பின்னர் போலீசார் பாதுகாப்புடன் சபரிமலைக்கு வந்தோம். பதினெட்டாம் படிகளில் ஏறி செல்லாமல், பின்புறம் உள்ள விஜபிக்கள் செல்லும் வழியாக அதிகாலை 3.30 மணிக்கு சென்றோம். அந்தளவுக்கு எதிர்ப்பு இல்லையென்றாலும், குறைவான பக்தர்களே சரண கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாப்புடன் ஐயப்பனைத் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினோம்” என கூறினார்.
ஐயப்பனைப் பெண்கள் தரிசனம் செய்தது உறுதி என்றால் புனிதப்பூஜை நடத்தப்படும் என பந்தள மகாராஜா அறக்கட்டளை நிர்வாகி தீபா சர்மா தகவல் அளித்துள்ளார்.பெண்கள் தரிசனம் குறித்து பந்தள மகாராஜா குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறினார்.
சபரிமலை கோயிலில் பெண்கள் தரிசனம் செய்ததால், சபரிமலையில் ஆசாரங்கள் தகர்க்கப்பட்டது. இதனால் கோயில் நடை மூடப்படும் என தந்திரி அறிவித்துள்ளார். பரிகார பூஜைகள் செய்வதற்குக் கோயில் நடை அடைக்கப்பட்டது. பக்தர்கள் சன்னிதானத்திலிருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பிறகு, சந்நிதி சுத்தி பூஜைகள் நடைபெறவுள்ளன. மீண்டும் கோயில் நடை ஜனவரி 12ஆம் தேதிதான் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சபரிமலை சன்னிதானம் செல்ல விரும்பும் பெண்களுக்கு போலீஸ் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post