தமிழகக் காவல் துறையின் நற்செயல்களையும் செய்திகளையும் மீம் வடிவில் பரப்பும் நோக்கில், காவல் துறை மேற்கு மண்டலத்தின் சமூக ஊடகப் பிரிவில் நான்கு பேர் மீம்களை உருவாக்கி வருகின்றனர். இந்த மீம்கள் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதற்காக ‘Westzonesocialmediacell’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த ஃபேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்ட ஒரே மாதத்தில், சுமார் 2,000 பேர் இதனைப் பின்தொடர்ந்து வருகின்றனர். இத்துடன் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களிலும் இக்குழு கணக்குகளைத் தொடங்கியுள்ளது. கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள ஐஜி அலுவலகத்தில் இக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த நவம்பர் 26ஆம் தேதியன்று, காவல் துறை மேற்கு மண்டலத்தின் சமூக ஊடகப் பிரிவில் மீம் குழுவினர் செயல்பாடு தொடங்கப்பட்டது. இது பற்றி மேற்கு மண்டல ஐஜி கே.பெரியய்யா பேசுகையில், காவல் துறையின் மன வலிமையையும் நன்மதிப்பையும் இக்குழு உயர்த்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“நாங்கள் பல வழக்குகளைக் குறித்த நேரத்துக்கு முன்பாகவே முடித்துள்ளோம். எங்களது வெற்றிக் கதைகளைப் பகிர்வதற்கு இந்தக் குழு வழி வகை செய்யும். எங்களது அதிகாரிகள் பலர் பல்வேறு சமூக நல செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவை பற்றி சமூக ஊடகங்களில் பகிரப்படும்” என்று பெரியய்யா கூறினார். இதையடுத்து, சேலம் நகர காவல் துறையும், கோவை நகர காவல் துறையும் சமூக ஊடகங்களில் செய்திகளைப் பரப்பவும், மீம்களை உருவாக்கவும் சில காவல் அதிகாரிகளை நியமித்துள்ளன.
Discussion about this post