2019ஆம் ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 2) சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அனைவருக்கும் காலை வணக்கம், புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறி, “அனைவரும் எளிமையான வாழ்க்கை வாழுங்கள். இது ஊழலை அகற்றிவிடும். இதுவே எனது செய்தி” என தமிழில் தனது உரையைத் தொடங்கினார் பன்வாரிலால் புரோகித். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, கஜா புயல் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தமிழக அரசைக் குற்றம் சாட்டிப் பேசினார். ஆனால் தான் பேசி முடித்தபிறகு அதுகுறித்து விவாதியுங்கள் என்று ஆளுநர் கூற, இதனைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், “பொங்கல் பரிசுப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை இந்த அரசு வழங்க உள்ளது. இது தவிர, திருவாரூரில் இடைத் தேர்தல் நடக்க இருப்பதால் அங்கு தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் விழாவைக் கொண்டாட ரூ.1,000 இந்த அரசால் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
மேலும், “தமிழ்நாட்டின் உரிமைகளை பாதிக்கும் வகையில் அணை பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதுபோன்ற சட்ட முன்மொழிவுகளில் தமிழ்நாட்டின் கருத்துகளை மத்திய அரசு பாகுபாடில்லாமல் ஆராய்ந்து நியாயமாக செயல்பட வேண்டும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரையும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தினார்.
ரூ.1,652 கோடியில் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும், திட்டத்தை முதல்வர் பழனிசாமி விரைவில் தொடங்கிவைப்பார் என்று தெரிவித்த ஆளுநர், “கஜா புயல் மறுசீரமைப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்.
தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’ மற்ற மாநில வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் விரைவில் மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை விளங்குகிறது” என்றும் தனது உரையில் சுட்டிக்காட்டினார். மேலும், முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற நாளிலிருந்து 11 ஆயிரத்து 286 கோப்புகளில் துரிதமாக முடிவு கண்டு சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்றும் ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.
Discussion about this post