தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பின் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “இந்த அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கஜா பாதிப்புக்கு 1500 கோடி கூட மத்திய அரசு வழங்கவில்லை, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக அரசு சொல்கிறது, ஆனால் அதை திறக்கச் சொல்லி பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு போடுகிறது. மேகதாட்டு விவகாரத்தில் அழுத்தம் தர முடியாத நிலையில், இந்த அரசாங்கம் இருந்துகொண்டிருக்கிறது.
கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி ரத்தத்தை செலுத்தி மோசமான நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது. உயர் மின் அழுத்தக் கோபுரங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசக் கூட தயாராக இல்லை. குட்கா, வருமான வரி சோதனை என குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
“முதல்வர் உள்பட அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் வழக்குகள் போடப்பட்டுவருகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண மர்மம் குறித்து சட்ட அமைச்சரே குற்றம் சாட்டியுள்ள நிலையில், சிபிஐ விசாரிக்க வேண்டுமென கோரியிருக்கிறோம்” என்று தெரிவித்த ஸ்டாலின் இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்யும் ஆளுநர் உரை வெட்கக் கேடானது. அரசு எழுதித் தந்திருக்கிற பெயிலியர் பேப்பர்களை சட்டமன்றத்தில் ஆளுநர் படித்துக் கொண்டிருக்கிறார். இதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் வரும் 8ஆம் தேதி வரை சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கலைஞர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த எம்.எல்.ஏ ஏ.கே.போஸ், 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு நாளைய தினம் இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. 4,5,7 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறவுள்ளது.
Discussion about this post