அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் படத்தை தொடர்ந்து இந்நிறுவனம் தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது.
தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து கவனம் பெற்ற கொடி படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார் மீண்டும் தனுஷை கதாநாயகனாகக் கொண்டு புதிய படத்தை இயக்குகிறார். விவேக் மெர்வின் இசையமைக்கிறார். இந்தப் படத்தையும் ராட்சசன் படத்தின் மூலம் கடந்த ஆண்டு பெரிய ஹிட் கொடுத்த ராம் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இவ்விரு படங்களின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
வெற்றிமாறனின் ஆஸ்தான நடிகர் என்று சொல்லும் அளவுக்கு தனுஷும் அவரும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்றிவருகின்றனர். வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் அசுரன் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. கரிசல் எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. இந்தப் படத்தை தாணு தனது வி.கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார்.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் கவனம் பெற்ற மாரிசெல்வராஜ் இயக்கும் அடுத்த படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளார். அந்தப் படத்தையும் வி.கிரியேஷன்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.
Discussion about this post