முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் காலியாக இருந்து வந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் யார் என்பதை நாளை மறுநாள் அறிவிக்க உள்ளன. தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவித்தது உள்நோக்கம் உடையதென கி.வீரமணி, திருமாவளவன் ஆகிய தலைவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் இன்று (ஜனவரி 2) தொடங்கியதும், நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு, மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், பொங்கல் பண்டிகை காரணமாகவும் கஜா புயல் நிவாரணப் பணிகள் நிறைவடையாததாலும், திருவாரூர் இடைத் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என்றும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் முறையிட்டார். இதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து இடைத் தேர்தலை தள்ளிவைக்க தலைமை நீதிபதி தஹில் ரமணி அமர்வின் முன்பு முறையிடப்பட்டது. இதனையடுத்து அவசர வழக்காக விசாரிப்பது குறித்து மதியம் முடிவுசெய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோலவே இடைத் தேர்தலை தள்ளிவைக்க மாரிமுத்து என்பவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். அதில், கஜா புயலால் திருவாரூர் மக்கள் பல ஆவணங்களை இழந்துள்ளனர். ஆவணங்கள் இல்லாததால் பலருக்கு ஓட்டு உரிமை பறிபோகும் நிலை உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இதனை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிப்போம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
Discussion about this post