வறுமை, பாலின சமத்துவம், வேலை, பொருளாதார வளர்ச்சி, தொழில் துறை, கண்டுபிடிப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட 15 பிரிவுகளில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் வெளியிட்டு வருகிறது. மேற்கண்ட பிரிவுகளில் இலக்குகளை அடைவதற்கு மாநிலங்களுக்கிடையே போட்டித்தன்மையை ஏற்படுத்தும் விதமாகவும், திறனை அதிகரிக்கும் விதமாகவும் இந்தப் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டு வருகிறது.
இதில் சுகாதாரத் துறைக்கான பட்டியலைப் பொறுத்தவரையில் மகப்பேறு & குழந்தைகள் நலம், தொற்று நோய்கள், மற்ற சாதாரண நோய்கள் மற்றும் சாலை விபத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. இதில் டிசம்பர் மாதத்துக்கான பட்டியலில் கேரளா 92 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 77 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் தேசிய சராசரியே 52 புள்ளிகளாக மட்டும்தான் உள்ளது. மற்றொரு தென் மாநிலமான தெலங்கானா 73 புள்ளிகளைப் பெற்று 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 71 புள்ளிகளுடன் பஞ்சாப் 4ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் சராசரி மகப்பேறு கால இறப்பு விகிதத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 70 ஆகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தற்போதே மகப்பேறு கால இறப்பு விகிதம் 1 லட்சத்துக்கு 66 ஆக மட்டுமே உள்ளது. இது கேரளாவில் 44 ஆகவும், மகாராஷ்டிராவில் 61 ஆகவும் உள்ளது.
இந்திய சராசரியோ தற்போது 130 ஆக உள்ளது. இந்திய சராசரியைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மகப்பேறு கால இறப்புகள் 50 விழுக்காடு குறைவாகவே உள்ளன. அதேபோல 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதமும் இந்திய சராசரியைக் காட்டிலும் தமிழ்நாட்டில் 60 விழுக்காடு குறைவாகவே உள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தில் கேரளா ஏற்கெனவே இந்தியாவின் இலக்கை எட்டி முன்னேறிய மாநிலமாக உள்ளது.
Discussion about this post