இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை விட விமான எரிபொருளின் விலை குறைந்துள்ளது.
ஜனவரி 1ஆம் தேதி பெட்ரோல், டீசலுக்கான விலையைப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்திருந்தன. அதோடு, விமான எரிபொருளுக்கான விலையும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ.58,060.97 ஆக இருக்கிறது. இதன் விலை ரூ.9,990 அல்லது 14.7 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பானது பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ளும் மிகப் பெரிய விலைக் குறைப்பாகும். மேலும், தொடர்ந்து இரண்டாவது மாதமாக விமான எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடைசியாக டிசம்பர் 1ஆம் தேதி இதன் விலை ரூ.8,327 குறைக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் விலையை விட விமான எரிபொருளின் விலை குறைந்துள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.68.65 ஆக உள்ளது. அதேநேரம் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் ரூ.58,060.97க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ.58.06 மட்டுமே. அதேபோல, டீசல் விலையை (ரூ.62.66) விடவும் விமான எரிபொருளின் விலை குறைவாகவே இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.22 ஆகவும், டீசல் விலை ரூ.66.14 ஆகவும் உள்ளது.
விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதால் விமானக் கட்டணங்களும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
Discussion about this post