“தேர்தல் களைகட்டிவிட்டது திருவாரூரில். இந்தத் தொகுதியைப் பொருத்தவரை பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். வீரக்கோடி வெள்ளாளப் பிள்ளை, கார்காத்தார் பிள்ளை,சோளியபிள்ளை, யாதவ பிள்ளை எனப் பிள்ளைமார் சமுதாயத்தின் உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் வாக்குகள்தான் திருவாரூர் தொகுதியின் வெற்றியை நிர்ணயம் செய்வதாக இருக்கிறது. கலைஞர் உயிருடன் இருந்தவரை இந்தத் தொகுதிக்குள் சாதி அரசியல் வரவில்லை. மக்களும் சாதி பார்க்கவில்லை. கலைஞர் என்ற ஒற்றைச் சொல்லுக்கு மட்டுமே திருவாரூர் கட்டுப்பட்டது. மக்கள் வாக்கும் விழுந்தது. ஆனால், கலைஞருக்குப் பிறகு இங்கே நிலைமை மாறிவிட்டது. தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் எப்படி சாதியை வைத்து வேட்பாளரின் வெற்றி – தோல்வி நிர்ணயம் செய்யப்படுகிறதோ அதே நிலைதான் இன்று திருவாரூர் தொகுதிக்கும். இது திமுக தலைமைக்கும் தெரியாமல் இல்லை.
திமுகவின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் எனத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். ஆனால், ஸ்டாலினுக்கோ கலைவாணன் மீது நல்ல அபிப்ராயம் கலைஞர் காலத்திலிருந்தே இல்லை. டி.ஆர்.பாலுவுக்கும் அவரது மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கும் கலைவாணன் நிற்பதில் உடன்பாடு இல்லை. ‘கலைஞர் இடத்துல கலைவாணனை எப்படி வெச்சுப் பார்க்கிறது? அதெல்லாம் சரியாக வராது. கட்சிக்காரங்களும் அதை விரும்பல. கலைஞர் குடும்பத்துல இருந்து ஒருத்தரை நிற்க வைங்க…’ என்று டி.ஆர்.பி.ராஜா வெளிப்படையாகவே அறிவாலயத்தில் சொல்லியிருக்கிறார்.
திருவாரூர் திமுக ஒன்றியச் செயலாளர் தேவா, பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கலைஞரின் மகள் செல்விக்கு தேவாவின் மனைவி மிகவும் நெருக்கம். கடந்த முறை இங்கே கலைஞர் போட்டியிட்ட போது செல்வி வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டார். அப்போது செல்வியோடு உடன் இருந்தவர் தேவாவின் மனைவிதான். அந்த தேவாவும் சீட் வாங்கிவிட வேண்டும் என செல்வி வழியாக முயற்சி செய்து வருகிறார். இந்தத் தகவல் தெரிந்து தேவாவைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் கலைவாணன். ‘நீங்க சீட்டுக்கு முயற்சி பண்றதா கேள்விப்பட்டேன். அதெல்லாம் வேண்டாம் தேவா. அதிமுகவில் ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் கொடுக்கிறதா முடிவு பண்ணியிருக்காங்க. உன்னால சமாளிக்க முடியாது. கடனை வாங்கி நீ செலவு பண்ணினாலும், தோத்துட்டா அதுல இருந்து மீண்டு வர நீ ரொம்பவும் கஷ்டப்படுவ… அதனால அமைதியா ஒதுங்கிடு..’ என அவருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் கலைவாணன். இப்படியாகத் தனக்கு சீட்டுக்குப் போட்டியாக வருவார்கள் என நினைப்பவர்களை எல்லாம் பேசியே சமாதானப்படுத்தி வருகிறார் கலைவாணன்.
அடுத்து அதிமுகவில், அமைச்சர் காமராஜின் நெருக்கமான நண்பரான கலியபெருமாளின் பெயர் அதிகம் அடிபடுகிறது. இவர் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரை நிறுத்தலாம் என்பது காமராஜின் திட்டம். அதேபோல கலைஞரை எதிர்த்து நின்று டெபாசிட் வாங்கிய பன்னீர்செல்வம் பெயரும் பரிசீலனையில் இருக்கிறது. எடப்பாடியைப் பொருத்தவரை, ‘திருவாரூர் தொகுதியில் எம்.ஜி.ஆர். இருந்தபோதும் சரி, அம்மா இருந்தபோதும் சரி… நாம ஜெயிக்கவே முடியலை. இந்தத் தேர்தலில் நாம ஜெயிச்சே ஆகணும். அதிமுக வரலாற்றில் எம்.ஜி.ஆர். சாதிக்க முடியாததை, அம்மா சாதிக்க முடியாததை எடப்பாடி சாதிச்சார் என்று பேச வைக்கணும். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்யுங்க..’ எனச் சொல்லியிருக்கிறாராம் முதல்வர்.
தினகரன் அணியில், எஸ்.காமராஜ் பெயரைத்தான் நிர்வாகிகள் சொல்கிறார்கள். தினகரனின் நெருக்கமான நண்பர் என்பதைத் தாண்டி பெரிய அளவு செல்வாக்கு என்பது மக்களிடம் இல்லை. ஆனால், தினகரன் அவரை நிறுத்துவாரா அல்லது வேறு யாரையாவது யோசிப்பாரா என்ற சந்தேகமும் இருக்கிறது. எப்படியோ திருவாரூரில் மும்முனைப் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.”
Discussion about this post