சென்னை சோழிங்கநல்லூர் அருகேயுள்ள பனையூர் கும்மிடிகான் தோப்பைச் சேர்ந்தவர் சாதிக் அலி (40). சோழிங்கநல்லூர் மீன் மார்க்கெட்டில் இவர் கடை நடத்தி வந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த உறவினர் ஒருவரது இறுதிச்சடங்கில், நேற்று (ஜனவரி 2) காலை இவர் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். நேற்று மாலை இவர்கள் அனைவரும் சோழிங்கநல்லூர் புறப்பட்டனர். காரை சாதிக் அலி ஓட்டி வந்துள்ளார்.
இரவு 7 மணியளவில் வேலூர் மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடியை அருகே வந்தபோது, பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இருந்து வெளியே வந்த கன்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் கார் மோதியது. கன்டெய்னர் லாரி நீளமாக இருந்ததால், சாதிக் அலி ஓட்டிவந்த காரின் முன்பகுதி முழுவதுமாக நசுங்கியது. விபத்தைக் கண்ட மக்கள், காரில் இருந்தவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், அவர்களை மீட்க முடியவில்லை. மிக கோரமான இந்த விபத்தில் சிக்கி, காருக்குள் இருந்த ஒரு சிறுவன் உட்பட ஆறு பேர் பலியாகினர்.
இந்த விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் வாலாஜா காவல் நிலையம், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காருக்குள் சிக்கிய ஆறு பேரின் உடல்களையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் சாதிக் அலி குறித்த விவரங்கள் தெரிய வந்தன. சாதிக் அலி, பர்வீன் (35), மகபூப்பாஷா (15), அன்வருதீன் (70), அலாமாபீ (65) மற்றும் அகமதுபாஷா (60) ஆகியோர் இந்த விபத்தில் பலியாகினர். வாலாஜா போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post