ஜெயலலிதா மரணம் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தார். இதுதொடர்பாக போலீஸ் விசாரணை வேண்டுமெனவும், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் ஆகியோரை விசாரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார். இந்தக் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 2) ஆறுமுகசாமி ஆணையத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “விசாரணை நடத்துவதற்கு அவர்களே ஒரு அரசாணையைப் போட்டுவிட்டு, விசாரணை நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் ஆணையத்துக்கு நிர்பந்தம் அளிக்கும் விதமாக சில கருத்துக்களைக் கூறுகின்றனர். எந்தவொரு அழுத்தத்துக்கும் ஆணையம் கட்டுப்படாது” என்று தெரிவித்தார்.
“ஆணையத்தின் விசாரணை முடியும் தருவாயில் போலீஸ் விசாரணை வேண்டுமென சட்ட அமைச்சரே கோருவது, ஆணையத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாகத் தெரிவித்த ராஜா செந்தூர் பாண்டியன், அமைச்சராக இருந்தாலும் சாமானியனாக இருந்தாலும் சரி சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதான் என்றும் குறிப்பிட்டார். சி.வி.சண்முகம் கூறியிருக்கும் கருத்துக்கள் குறித்த விசாரணையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்த அவர், “ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் நிர்மலா பெரியசாமி ஆகியோரை ஆணையம் விசாரிக்க வேண்டும். இல்லையெனில் மனுதாக்கல் செய்து நாங்கள் விசாரிப்போம்” என்றும் கூறியுள்ளார்.
மேலும், “03.12.2016 அன்று ஜெயலலிதா சிகிச்சைகளை பார்வையிட்ட எய்ம்ஸ் மருத்துவர்கள், அவருக்கு எவ்வித இதயச் சிகிச்சைகளும் இந்த நிலையில் அவசியமில்லை என்று தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு இதய நோயே கிடையாது என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்” என்றும் அவர் விளக்கினார்.
Discussion about this post