தமிழக சட்டப்பேரவையின் 2019ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று (ஜனவரி 2) நடைபெற்றது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையைத் தொடங்கினார். ஆளுநர் பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, கஜா புயல் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தமிழக அரசைக் குற்றம்சாட்டிப் பேசினார். தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் நேற்று மாலை 5 மணியளவில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைக் கூட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், யார் யார் என்னென்ன பிரச்சினைகளை எழுப்ப வேண்டும், அதிமுக அரசுக்கு எவ்வாறு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது யார் என்பது வரும் 4ஆம் தேதி மாலை தெரியும். இன்று மாலை 5 மணி வரை கட்சியின் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் வேட்பாளரை நியமிக்கவுள்ளோம். 5ஆம் தேதி மாலை நானா, திமுக பொருளாளர் துரைமுருகனா, திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலுவா என்பது தெரியவரும். அவ்வாறு நியமிக்கப்படும் வேட்பாளரை வெற்றிபெற வைக்க அனைத்து மாவட்டச் செயலாளர்களும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் செயலாற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தேர்தல் அறிவிப்பில் ஏதோ சூட்சமம் இருப்பதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், “தேர்தல் ஆணையம், மத்திய மாநில அரசுகள் கூட்டு சேர்ந்து, மற்ற 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த முன்வராமல், திருவாரூர் இடைத்தேர்தலை நடத்துவதற்கு என்ன சதி என்று தெரியவில்லை. என்ன இருந்தாலும் தேர்தலைச் சந்திக்க திமுக தயாராக இருக்கிறது” என்றார்.
“கஜா புயல் நிவாரணத்தைப் பெறமுடியாத ஒரு வக்கற்ற ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியைக் கண்டித்துத்தான் சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தோம். கஜா நிவாரணத்தைப் பெற தொடர்ந்து குரல் எழுப்புவோம்” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
Discussion about this post