கதிர் நடிப்பில் உருவான சிகை திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
வித்தியாசமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி இளம் நடிகர்களில் கவனம் ஈர்த்து வருகிறார் கதிர். விக்ரம் வேதா, மதயானைக் கூட்டம், கிருமி உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார். மாரி செல்வராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் கடந்த ஆண்டு ஹிட்டான படங்களின் பட்டியலில் இணைந்தது.
ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் கதிர் நடிப்பில் உருவாகியிருந்த சிகை திரைப்படம் எப்போது ரிலீஸ் என்ற கேள்வி நீண்டகாலமாகவே இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் படத்தின் வெளியீடு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. திருநங்கையாக கதிர் இடம்பெற்றிருந்த போஸ்டர் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் விஸ்வாசம், பேட்ட எனப் பெரிய படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ள நிலையில் சிகை படம் தன் பாதையை மாற்றிக்கொண்டுள்ளது. அந்தவகையில் இந்தப் படம் தமிழில் முதன்முறையாக ஜீ5 (zee5) தளத்தில் வெளியாக உள்ளது. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட சிகை படத்தின் டிஜிட்டல் உரிமையை ஏற்கெனவே இந்நிறுவனம் கைப்பற்றியிருந்தது.
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சீதக்காதி ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் ஏற்கெனவே உருவாகி நீண்ட காலமாக வெளியாகாமல் உள்ள ஒரு பக்க கதை படத்தின் டிஜிட்டல் உரிமையையும் ஜீ5 (zee5) நிறுவனம் வாங்கியுள்ளது. இதில் காளிதாஸ் ஜெய்ராம், மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ளனர்.
Discussion about this post