விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள பரிக்கல் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பால் பண்ணையை ஆய்வுசெய்த உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன், அது சுகாதாரமில்லாமல் அமைக்கப்பட்டிருந்ததால் நோட்டீஸும் அளித்துள்ளார். இதையடுத்து கதிரவனை தொடர்புகொண்ட இருவர், தங்களை சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தம்பி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘தொலச்சிடுவேன்’ என்றும், ‘நடப்பது எங்க ஆட்சி’ என்றும் கடுமையான வார்த்தைகளால் மிரட்டினர். இந்த ஆடியோ சமூகதளங்களில் வைரலாகப் பரவியது.
இதுதொடர்பான எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘வழக்கு பதிவு செய்யட்டும், உண்மை கண்டறியப்பட்ட பிறகு பார்ப்போம்’ என கேஷுவலாகப் பதிலளித்திருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட ஆவின் பால் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்தான் தென்சென்னையைச் சேர்ந்த வைத்தி (எ) வைத்தியநாதன். இவர் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதா (எ) ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானவர். அமைச்சருக்கும் நன்கு அறிமுகமானவர். இருவரையும் அண்ணன் என்றுதான் வைத்தி அழைப்பாராம்.
இதற்கிடையே மகேஷ் என்பவர் பரிக்கலில் தனது பழைய ரைஸ் மில்லை பால் பண்ணையாக மாற்றி, பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்து ஆவினுக்கும் மற்ற பால் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து வந்திருக்கிறார். இந்தப் பால் பண்ணை தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார் சென்றுள்ளது. புகார் குறித்து ஆய்வு செய்வதற்காக உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவனை அனுப்பி வைத்திருக்கிறார்கள். கதிரவனும் பால் பண்ணையை ஆய்வு செய்து குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி நோட்டீஸ் அளித்துள்ளார்.
பால் பண்ணைத் தொழிலில் வைத்தி அனைத்துவிதத்திலும் திறமைசாலி என்று சொல்வார்கள். பால் பண்ணை மூடும் நிலைக்குத் தள்ளப்படுவதை அறிந்த மகேஷ், இதுகுறித்து வைத்தியிடம் முறையிட்டிருக்கிறார். இதையடுத்து கதிரவன் செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்ட வைத்தி, அவரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இந்த ஆடியோ வெளியுலகுக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேலிடத்து உத்தரவால் கதிரவனின் புகாரை பெற்றுக்கொண்ட திருநாவலூர் காவல் நிலையத்தினர், வைத்தி மற்றும் மகேஷ் மீது குற்ற எண் 829/ 2018, 294b, 353, 506 ipc, 419 ipc, 420 உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரையும் கைது செய்வதற்காக மேலிட உத்தரவுக்குக் காத்திருக்கிறது காவல் துறை.
தற்போது வைத்தி அமமுகவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். வைத்தியும் மகேஷும் தனது தம்பி இல்லை என்பதால் வழக்கு தொடுத்தால் சந்திக்கத் தயார் என்று மார் தட்டியுள்ளார் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.
Discussion about this post