சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியிடம் அங்கு பணிபுரிந்தவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணையை முடித்துச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சென்னை மகளிர் நீதிமன்றத்தில் அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது. குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
நேற்று (ஜனவரி 2) சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 17 பேருக்கும் எதிராகக் குற்றச்சாட்டு பதிவு முடிந்த நிலையில், வழக்கின் சாட்சி விசாரணை வரும் 18ஆம் தேதி தொடங்கும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கில் 10 மருத்துவர்கள், நான்கு மாஜிஸ்திரேட்டுகள் உள்ளிட்ட 81 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். வரும் 18ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் இருந்து சாட்சி விசாரணை தொடங்கவுள்ளது.
Discussion about this post