சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, 50 வயதுக்குட்பட்ட பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் நேற்று (ஜனவரி 2) சபரிமலையில் வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து கேரளாவில் பாஜகவினர், இந்து அமைப்புகள், ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கேரளாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதற்கிடையில் ஐயப்பனைத் தரிசனம் செய்த பெண்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேரக் கிளம்பியுள்ளன. உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்திய கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசைப் பாராட்டுகிறோம் என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் சனாதனவாதிகள் தடுத்து வந்தனர். அந்தச் சனாதன போக்கை நியாயப்படுத்தும் விதமாக ‘அது பாரம்பரியம் தொடர்பான பிரச்சினை’ என்று பிரதமர் நரேந்திர மோடியே கருத்து தெரிவித்தார். அங்கு முறையாக விரதமிருந்து வழிபடச் சென்ற பெண்களைச் சனாதன கும்பல் அடித்து விரட்டி வன்முறையில் ஈடுபட்டது.
இருந்தபோதிலும், கோயிலுக்குள் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா என்ற அந்த இரண்டு பெண்களின் பெயர்களும் வரலாற்றில் நீங்கா இடம்பிடிக்கும் என்பது உறுதி. அவர்களுக்குச் சனாதன வெறியர்களால் ஊறு நேரிடலாம். எனவே, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது சபரிமலை கோயிலில் பெண்கள் வழிபாடு செய்துள்ளதைத் தொடர்ந்து கோயில் கருவறையை மூடிப் புனிதப்படுத்தும் சடங்குகள் செய்யப்படுவதாகத் தகவல்கள் வந்துள்ளன. இது கோயிலின் மரபுக்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது. எனவே, அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கோயிலுக்குப் பெண்கள் சென்றது கண்டிக்கத்தக்கது
இந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இரண்டு பெண்கள் சபரிமலைக் கோயிலுக்குள் சென்றிருப்பது கண்டிக்கத்தக்கது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அழைத்துச் சென்று நாடு முழுவதும் உள்ள இந்து மத மக்களுக்கு கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post