அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான கொள்முதலின்போது முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் ராணுவ அதிகாரிகள் 18 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாகச் சொல்லப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டது சிபிஐ. இந்த நிலையில், நேற்று (ஜனவரி 2) கர்னல் ராமன் தாஹ்டா, லெப்டினண்ட் கர்னல் மகேந்திர குமார், சுபேதார் தேவேந்தர் குமார், சகுரன் சஹூ, ஹவில்தார் அபய் சிங் மற்றும் ஒப்பந்ததாரர் கே.கே.யாங்போ ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தது சிபிஐ. ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் படி இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் பகுதியில் 556ஆவது ராணுவப் பிரிவின் தலைமை அலுவலராக இருந்து வருகிறார் ராமன் தாஹ்டா. இதன் மண்டலத் தலைவராக மகேந்திர குமார் உள்ளார். ராணுவப் படையில் இருந்து வெளியான புகாரின் அடிப்படையிலேயே சிபிஐ இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. யாங்போ விநியோகித்த உணவுப் பொருட்களின் அளவு, தரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதில் மேலும் பல அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் எனவும் சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post