ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிய சட்டமன்றக் கூட்டத் தொடரை மரபுப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றித் தொடங்கி வைத்துள்ளார். ஆளுநர் உரை என்ற பெயரில் ஆளுநர் என்று இருந்தாலும், அது முழுக்க முழுக்க தமிழக அரசு தயாரித்துக் கொடுக்கும் உரைதான் என்பது அரசியலில் குழந்தைக்குக்கூடத் தெரியும்.
அந்த வகையில் தமிழக அரசு தயாரித்துக் கொடுத்து ஆளுநர் வாசித்த உரையை திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குறை சொல்லிக் கொண்டிருக்க பாட்டாளி மக்கள் கட்சியோ ஆளுநரின் உரையின் மீது பொதுவாகப் பாராட்டு தெரிவித்துள்ளது.
நேற்று ஆளுநர் உரை பற்றி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையின் முழு வடிவம் இதோ…
2019இல் பாராட்டு
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் ஆளுனர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. ஆளுனர் உரையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவையாக உள்ளன. ஆனால், அதேநேரத்தில் பொதுமக்கள், குறிப்பாக உழவர்கள், எதிர்பார்த்திருந்த அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.
உழவுத் தொழிலின் வளர்ச்சி தான் தமிழகத்தின் சமத்துவமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்; உழவுத் தொழில் வளர்ச்சிக்கு பாசனத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அத்திக்கடவு – அவினாசி திட்டம் உள்ளிட்ட பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் விழிப்புணர்வு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வ்ந்த நிலையில், அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை ரூ.1652 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டப் பணிகளுக்கான தொடக்கவிழா விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அதேநேரத்தில் இத்திட்டத்தை, முழுமையாகப் பயனளிக்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு ரூ.3523 கோடி செலவில் முந்தைய வடிவத்திலேயே செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை துறைமுகம் -மதுரவாயல் இடையிலான பறக்கும் பாலம் திட்டத்தை முன்னுரிமை அளித்து செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்; அணைகள் பாதுகாப்பு மசோதாவை திரும்பப்பெறும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பது மனநிறைவு அளிக்கிறது. இவை அறிவிப்புகளாக இல்லாமல் இவற்றுக்கு அரசு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.
தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருப்பதை பாமக தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் தொழில்துறை வளர்ச்சிக்கு வழிவகுப்பதற்காக புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்ற ஆளுனரின் அறிவிப்பும் ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம் – 2023 குறித்தும் ஆளுனர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தி முடிக்க இன்னும் 4 ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் இத்திட்டத்திற்காகத் தமிழக அரசு மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
திரூவாரூர் மாவட்டம் தவிர, மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொருட்களுடன் சேர்த்து தலா ரூ.1000 வழங்கப்படும் என்றும் ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பிற பகுதி மக்களுக்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று ஆளுனர் மூலம் தெரிவித்துள்ள அரசு, தாமிர ஆலைகளுக்கு தடை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் ஆளுனர் கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கூடுதல் நிதியைப் பெற வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, ஆளுனர் உரையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட பல விஷயங்கள் இடம்பெறாதது ஏமாற்றத்தைத் தருகிறது.
இந்தியாவின் பல மாநிலங்களில் வேளாண் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் அதேபோல் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல், உழவர்களுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ரூ.1700 கோடி நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. அத்தொகையை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதுடன், உழவர்களின் பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்டத்தை நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்”
என்பதாக முடிகிறது ராமதாசின் அறிக்கை.
2018இல் குற்றச்சாட்டு!
இதே பாமக நிறுவனர் ராமதாஸ் 2018ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி 8ஆம் தேதி சட்டப்பேரவையில் நடந்த ஆளுநர் உரையைச் சரமாரியாக விமர்சித்திருந்தார்.
2018ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையையும் பார்ப்போம்.
“ஆளுனர் உரை: பழைய மொந்தையில் மிகப்புளித்து போன கள்ளாக உள்ளது” என்ற தலைப்பில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழகச் சட்டப்பேரவையில் இன்று ஆளுனர் ஆற்றிய உரை, ஆளுனர் உரைக்கான எந்த இலக்கணமும் இல்லாமல் வெற்று முழக்கங்களின் தொகுப்பாக உள்ளன. ஆளுனர் உரை என்பது வரும் ஆண்டில் அரசு செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கான கொள்கை அறிவிப்புகளின் தொகுப்பாக அமைந்திருப்பது வழக்கம். ஆனால், ஆளுனர் உரையில் ஒரே ஒரு புதிய அறிவிப்புகூட இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஆளுனர் ஆற்றும் உரையில் முழுக்க முழுக்க முதலமைச்சரின் புகழ் பாடும் வாசகங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். தம்மை ஜெயலலிதாவின் ஆண் வடிவமாக கருதிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி ஆளுனர் உரையை தமது புகழ்பாடும் பாராட்டுப் பத்திரமாக தயாரித்து ஆளுனரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறார். இத்தகையதொரு குப்பைக் கருத்துக்களைத் தம்மால் படிக்க முடியாது என்று ஆளுனர் பன்வாரிலால் புரோகித் மறுத்திருக்க வேண்டும். ஆனால், தமது அரசியல் சட்ட கடமையை செய்ய வேண்டும் என்பதற்காக எழுதிக்கொடுத்ததை அவர் படித்துவிட்டுச் சென்றுள்ளார்.
ஆனால், ஆளுனர் உரையால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புளங்காகிதம் அடைந்து கொள்வதைத் தவிர தமிழகத்திற்கும் மக்களுக்கும் எந்தப் பயனுமில்லை என்பதே உண்மை.
ஒக்கிப் புயலில் சிக்கி நடுக்கடலில் தவித்த மீனவர்களைக் காப்பாற்றுவதில் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவதாக ஆளுனர் கூறியிருக்கிறார். உண்மையில் ஒரே ஒரு மீனவரைக் கூட மத்திய, மாநில அரசுகள் காப்பாற்றவில்லை. அனைத்து மீனவர்களையும் சக மீனவர்கள் தான் போராடி மீட்டனர். இத்தகைய சூழலில் மீனவர்களை தமிழக அரசு தான் மீட்டதாகக் கூறி பாராட்டுவது உண்மைக் கலப்பற்ற பொய் ஆகும். ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களில் 238 பேர் மீட்கப்படவில்லை. அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவர்களின் இறுதிச்சடங்கை குடும்பத்தினர் செய்து முடித்து விட்டனர். இத்தகைய சூழலில், அவர்கள் இறந்து விட்டதாக அறிவித்து அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதை விடுத்து, கடைசி மீனவரை மீட்கும் வரையில் மீட்புப் பணியைத் தொடர அரசு உறுதிபூண்டிருப்பதாக ஆளுனர் கூறுவது குரூரமான நகைச்சுவையாகும்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த தொலைநோக்குத்திட்டம் 2023-ஐ செயல்படுத்த இந்த அரசு உறுதி பூண்டிருப்பதாக ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட அபத்தம் எதுவும் இருக்க முடியாது. இந்த திட்டத்திற்கான கால அவகாசம் 11 ஆண்டுகள் ஆகும். இதற்கான முதலீடு ரூ.15 லட்சம் கோடியாகும். திட்டம் அறிவிக்கப்பட்டு வரும் மார்ச் மாதம் 6 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை ஒரு விழுக்காடு தொகைகூட செலவிடப்படவில்லை. இதனால் திட்ட மதிப்பு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரித்து விட்ட நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளில் இவ்வளவு தொகையை தமிழக அரசு எவ்வாறு முதலீடு செய்யப்போகிறது? என்பதை தமிழக ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.
2015-ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட ரூ.2.42 லட்சம் கோடி முதலீட்டில் ரூ.62,738 கோடி மதிப்பில் 61 தொழில் திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் 96,341 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் மக்களை ஏமாற்றும் செயலாகும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் ரூ.3636 கோடி மதிப்பிலான 7 பணிகள் செயல்படுத்தி முடிக்கப்பட்டு விட்டதாகவும், அவற்றின் மூலம் 9775 பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறி அந்தத் திட்டங்களை 29.01.2016 அன்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆனால், அதன்பின் இரு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் இப்போது தான் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக ஆளுனர் உரையில் கூறப்பட்டுள்ளது. பினாமி அரசின் பித்தலாட்ட அரசியலை முன்னுக்குப்பின் முரணான அறிவிப்புகள் அம்பலப்படுத்துகின்றன.
மகளிருக்கு இரு சக்கர ஊர்தி வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படகூடிய மானியத்தின் உச்சவரம்பு 20000 ரூபாயிலிருந்து ரூ.25,000 ஆக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி அரசு பதவியேற்ற முதல் நாளிலேயே இதற்கான அரசாணைப் பிறப்பிக்கப்பட்டு விட்டது. ஆனால், அதன்பின் ஓராண்டாகியும் இத்திட்டம் நடைமுறைக்கு வராத நிலையில் அதற்கான மானியத்தை அதிகரிப்பதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.
உழவர்கள் நலனுக்காகவோ, மாணவர்கள் நலனுக்காகவோ, வேலைவாய்ப்பை பெருக்கவோ, வறட்சியைப் போக்கவோ எந்த திட்டமும் ஆளுனர் உரையில் அறிவிக்கப்படவில்லை. மாறாக அரசுக்கு தகுதியற்ற பாராட்டுக்கள் பொழியப்பட்டிருக்கின்றன. வழக்கமான ஆளுனர் உரைகள் பழைய மொந்தையில் புதிய கள்ளாக இருக்கும். ஆனால், இந்த ஆளுனர் உரை பழைய மொந்தையில் புளித்துப்போன கள்ளாக உள்ளது” என்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார் ராமதாஸ்.
அது போன ஆண்டு, இது இந்த ஆண்டு
2018 ஆளுனர் உரையின் மீதான ராமதாஸ் அறிக்கையில், “ஏமாற்றம் அளிக்கிறது, எந்தப் பயனுமில்லை, குரூரமான நகைச்சுவை, முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புகள், தகுதியற்ற பாராட்டுகள், பினாமி அரசின் பித்தலாட்டங்கள்’ என்று கடுமையான ஹேஷ்டாக்குகள் இடம்பெற்றிருந்தன.
ஆனால் 2019ஆம் ஆண்டு ஆளுநர் உரையின் மீதான ராமதாஸின் அறிக்கையில், “வரவேற்கத் தக்கது, மன நிறைவு அளிக்கிறது, ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும், மிகவும் உதவியாக இருக்கும்’ என்ற மென்மையான ஹேஷ்டாக் குகள் இடம்பெற்றிருக்கின்றன.
இதிலிருந்தே அதிமுகவை நோக்கி பாமக நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்பது தெரிகிறது!
Discussion about this post