முன்னாள் முதல்வர் கலைஞர் மறைவால் காலியாக இருந்துவந்த திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்தாமல், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுவது ஏன் என்று ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தாலும், மறுபக்கம் தேர்தல் வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தேர்தலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா முறையிட்டிருந்த நிலையில் அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதற்கிடையே முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்துள்ளது சீமானின் நாம் தமிழர் கட்சி. தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் ஹமீது தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தொகுதியில் மொத்தமுள்ள 2,58,687 வாக்காளர்களில் 1,27, 500 ஆண் வாக்காளர்களும் 1,31,169 பெண் வாக்காளர்களும் 18 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர். 303 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜனவரி 3) தொடங்கியது. முதல் நபராக தருமபுரி பென்னாகரத்தை சேர்ந்த அக்னி ஸ்ரீராமச்சந்திரன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை காரணமாகவும் கஜா புயல் நிவாரணப் பணிகள் நிறைவடையாததாலும், திருவாரூர் இடைத் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, இடைத் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியும் வரை இடைத் தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டுமென்று கோரிய மனு வரும் பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Discussion about this post