சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, நேற்று (ஜனவரி 2) பிந்து, கனகதுர்கா என்ற இரு பெண்கள் சபரிமலை சன்னிதானத்திற்குள் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இதனால் சபரிமலை சன்னிதானம் மூடப்பட்டு, பரிகார பூஜை நடத்தப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நடை திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கேரள அரசைக் கண்டித்து பாஜக மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள அம்மாநில தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று (ஜனவரி 3) கேரளாவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. சபரிமலை கர்ம சமிதி, விஸ்வ இந்து பரிஷத் அமைப்புகள் இதற்கு அழைப்பு விடுத்துள்ளன. பாஜக, இந்து ஐக்கிய வேதி உட்பட பல அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பள்ளி, பல்கலைக்கழகத் தேர்வுகள், தொழில்நுட்பத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இன்று மாநிலம் முழுவதும் கருப்பு தினம் கடைபிடிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற கலவரத்தில் சந்திரன் உன்னிதன் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தலையில் காயமடைந்த இவர் இன்று (ஜனவரி 3) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் சபரிமலை கர்மா சமிதி அமைப்பைச் சேர்ந்தவர்.
முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்காமல் பேருந்துகளை இயக்கியவர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். பல்வேறு பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பேருந்து சேவையை நிறுத்தி வைப்பதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்தது.
திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும், பத்தனம்திட்டா, பந்தளம், கொச்சி ஆகிய நகரங்களிலும் முதன்மையான சாலைச் சந்திப்புகளில் காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகத்தின் கண்ணாடிகளை 15 பேர் கும்பல் அடித்தும், கற்களை வீசித் தாக்கியும் நொறுக்கியது.
சபரிமலையில் பெண் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றிரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆயிரம் விளக்கு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் போலீசார். இந்த தாக்குதல் தொடர்பாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதி இந்து முன்னணிச் செயலாளர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
“பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. அரசியலமைப்பு சட்டத்தை அரசு நிறைவேற்றியுள்ளது. சங் பரிவார் இயக்கம் சபரிமலையை கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கிறது” என செய்தியாளர்கள் சந்திப்பில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
“கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு பாஜகதான் காரணம். கேரளாவில் சிபிஎம் கட்சி அலுவலகங்களையும் கடைகளையும் அடித்து நொறுக்கின்றனர் பாஜகவினர். ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் ஒருவருக்கொருவர் உதவியாகவே இருப்பர். இரு பெண்கள் ஐயப்பனை தரிசித்தபோது ஐயப்ப பக்தர்கள் யாரும் எதிர்க்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் 7 முழு அடைப்புப் போராட்டங்கள் கேரளாவில் நடைபெற்றுள்ளன. இன்று நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தின்போது 79 அரசுப் பேருந்துகள், 7 போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதில் 39 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். கேரளாவில் போராட்டம் நடத்துவதைக் கைவிட வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்தாக வழக்கறிஞர் பி.வி.தினேஷ் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இரு பெண்கள் தரிசனத்தை அடுத்து சன்னிதானம் சுத்தப்படுத்தப்பட்டதாக மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோயில் மூடப்பட்டது குறித்து ஜனவரி 22ஆம் தேதி சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையோடு சேர்த்து இதுவும் விசாரிக்கப்படுமென்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை பல்லாவரத்தில் கேரள முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழிசை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரள முதல்வரின் உருவ பொம்மை எரித்ததற்காக, தமிழிசை உள்பட பாஜகவைச் சேர்ந்த 150 பேர் மீது 3 பிரிவுகளில் பல்லாவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இரு பெண்கள் சபரிமலை சன்னிதானத்துக்குள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் இந்து அமைப்பினர் சார்பில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கோனார் பங்கேற்றுள்ளனர்.
சபரிமலை விவகாரம் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்திலும்போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாகர்கோவிலை அடுத்த நாக்கால் மடம் பகுதியில் தமிழக அரசுப் பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. மார்த்தாண்டம் அருகே உண்ணாலைக்கடை பயணிகள் நிழற்குடையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உருவப் படத்துக்கு மர்மநபர்கள் சிலர் செருப்பு மாலை அணிவித்திருந்தனர். நாகர்கோவில் வைராவிளை, செம்பன்காலை பகுதியில் நான்கு சிபிஎம் கொடிக்கம்பங்கள் உடைக்கப்பட்டன. நான்கு இடங்களில் கேரள முதல்வர் படம் எரிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சன்னிதானத்துக்குள் நுழைந்து இரு பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜேஸ் குருப் என்பவர் பாதி மீசையை மழித்துக் கொண்டார்.
சபரிமலைக்கு மாலை அணிந்து சென்றபோது போலீஸ் தன் நெஞ்சில் எட்டி உதைத்ததாக, சில நாட்களுக்கு முன்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் ராஜேஸ் குருப். அது போலியானது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post