கடந்த நான்காண்டுகளுக்கான இந்தியாவின் வேளாண் பொருட்கள் இறக்குமதி குறித்த விவரங்களை மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் இந்தியா மொத்தம் 10,671.90 மில்லியன் டாலர் மதிப்பிலான வேளாண் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இதற்கு முந்தைய 2017-18 நிதியாண்டின் இதே காலத்தில் இந்தியாவின் இறக்குமதி மதிப்பு 13,375.81 மில்லியன் டாலராக இருந்தது. அதாவது வேளாண் பொருட்கள் இறக்குமதியில் 20.21 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
தாவர எண்ணெய் இறக்குமதி மதிப்பு 7,234.48 மில்லியன் டாலரிலிருந்து 6,080.12 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது 15.95 சதவிகிதம் சரிவாகும். அதேபோல, பருப்பு இறக்குமதியில் 73.24 சதவிகிதமும், சர்க்கரை இறக்குமதியில் 45.36 சதவிகிதமும், தேயிலை இறக்குமதியில் 23.89 சதவிகிதமும், காய்கறிகள் இறக்குமதியில் 48.87 சதவிகிதமும் சரிவு ஏற்பட்டுள்ளது. கோதுமை இறக்குமதி 255.04 மில்லியன் டாலரிலிருந்து 99.72 சதவிகிதம் குறைந்து 0.72 மில்லியன் டாலராக இருக்கிறது.
2014-15ஆம் ஆண்டில் 18,044.69 மில்லியன் டாலர் மதிப்புக்கும், 2015-16ஆம் ஆண்டில் 19,685.52 மில்லியன் டாலர் மதிப்புக்கும், 2016-17ஆம் ஆண்டில் 22,117.38 மில்லியன் டாலர் மதிப்புக்கும், 2017-18 நிதியாண்டில் 20,955.34 மில்லியன் டாலர் மதிப்புக்கும் வேளாண் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.
Discussion about this post