தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வாலும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே ராகுல் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். கடந்த போட்டியின் போது அறிமுகமாகிச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மயங்க் அகர்வால் இந்தப் போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட்டு அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். அவருக்கு சத்தேஸ்வர் புஜாரா பக்க பலமாக இருந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் வகுத்த வியூகங்கள் இந்த கூட்டணியிடம் பலிக்கவில்லை. இந்தப் போட்டியிலும் அகர்வால் அரை சதம் கடந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக 77 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் ஏழு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடக்கம்.
மறுமுனையில் புஜாரா வழக்கம் போல தனது நிலையான ஆட்டத்தால் அணியைத் தாங்கிப்பிடித்தார். கேப்டன் விராட் கோலி களமிறங்கி புஜாராவுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரஹானேவும் அதிக நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. 18 ரன்களில் ரஹானே பெவிலியன் திரும்பினார். ஆனால் புஜாரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 18ஆவது சதத்தை அடித்தார். அவருடன் இணைந்த ஹனுமா விஹாரியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது. புஜரா 130 ரன்களுடனும் விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று வீசப்பட்ட 90 ஓவர்களில் (540 பந்துகள்) புஜாரா மட்டுமே 250 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். மேலும் இந்த இன்னிங்ஸ் முழுக்க திணறல் இல்லாமல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி இந்த நிலையை அடைவதற்கு புஜாராவுக்கு பெரும் பங்கு உள்ளது. மேலும் இந்தத் தொடரில் அவர் அடிக்கும் 3ஆவது சதம் இதுவாகும்.
ஆடுகளம் தொடர்ந்து பேட்டிங்குக்கு சாதகமாகவே உள்ளது. நாளையும் இதே நிலை தொடர வாய்ப்புள்ளதால் இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் இந்திய அணி பேட் செய்ய வேண்டும். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இன்னும் வலுவான இடத்திற்குச் செல்ல முடியும். மூன்றாம் நாள் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாகும் போது இந்திய அணி பந்து வீச்சாளர்களால் எளிதாக விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும். மாறாக நாளையே ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டால் அந்த அணியும் ரன் குவிப்பில் ஈடுபடும்.
Discussion about this post