திருப்பூரின் மங்கலம் பகுதியில் உள்ள கோயில்களில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு பஞ்சலோக சிலைகள் திருடப்பட்டன. கருமத்தம்பட்டி அருகே உள்ள கைவிடப்பட்ட கட்டடங்களில் அச்சிலைகளைத் தற்போது காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இவ்விரு பஞ்சலோக சிலைகளின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது. திங்கள்கிழமையன்று, கருமத்தம்பட்டி – அவினாசி சாலையில் கைவிடப்பட்ட கட்டடத்தில் இரு பஞ்சலோக சிலைகளும் கண்டறியப்பட்டுள்ளதாகப் பெயர் கூற விரும்பாத நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் அவ்விடத்துக்கு விரைந்து சென்று பஞ்சலோக சிலைகளை மீட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு மாதத்திற்கு முன்பே மங்கலம் பகுதியில் பஞ்சலோக சிலைகள் திருடப்பட்டுவிட்டதாகத் தெரிய வந்தது. பின்னர் இரு சிலைகளும் மங்கலம் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. சிலைகளைத் திருடியது யார் என்பதைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு மாதம் முன்பு, சிலை திருட்டில் ஈடுபட்ட நபர்களைச் சூளூர் காவல் துறையினர் கைது செய்து ரூ.5.31 லட்சத்துக்கும் மேல் மதிப்பு கொண்ட சிலைகள், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post