ஒரு மாதம் முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாரில் பசுக்கள் கொல்லப்பட்டதாகக் கூறி பசுப் பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கலவரத்தைத் தடுக்கச் சென்ற காவல் துறையினர் தாக்கப்பட்டனர்.
அப்போது, காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் படுகொலை செய்யப்பட்டார். இவ்விவகாரம் தேசிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியது. புலந்த்ஷார் வன்முறை விவகாரத்தில் முக்கியக் குற்றவாளி என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள யோகேஷ் ராஜ், பஜ்ரங் தள் இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் கடந்த 30 நாட்களாக காவல் துறையிடம் பிடிபடாமல் தப்பித்து வந்தார். அது மட்டுமல்லாமல், தலைமறைவாக இருந்துகொண்டு வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், பஜ்ரங் தள் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்களே யோகேஷ் ராஜை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தள் இயக்கத்தின் தலைவர்கள் யோகேஷ் ராஜை ஒப்படைத்தபிறகே அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. காவல் ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசு செயலற்று இருப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
பசு மாடுகள் கொல்லப்பட்டதாக, கடந்த டிசம்பர் 3ஆம் தேதியன்று யோகேஷ் ராஜும் ஒரு புகார் அளித்திருந்தார். அவரது புகாரின் அடிப்படையில் ஐந்து இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு வாரம் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர், உரிய ஆதாரங்கள் இல்லாமையால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 1ஆம் தேதியன்று காவல் ஆய்வாளரின் விரல்களைக் கோடாரியால் வெட்டியதற்காகவும், அவரது தலையில் காயம் ஏற்படுத்தியதற்காகவும் கலுவா என்ற நபர் கைது செய்யப்பட்டார். அதிகாரியைத் துப்பாக்கியால் சுட்டதற்காக, டிசம்பர் 28ஆம் தேதியன்று பிரஷாந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். அதிகாரியின் கைத்துப்பாக்கியைப் பறித்த ஜானி என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். வீடியோ ஆதாரங்கள் வாயிலாக இவர் பிடிபட்டார். டிசம்பர் 9ஆம் தேதியன்று, சுபோத் குமார் கொலையில் ஈடுபட்ட ஜிதேந்திர மாலிக் என்ற ராணுவ வீரரும் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.
Discussion about this post