கடந்த 15 மாதங்களில் முதன்முறையாக, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையை விட அதிக வளர்ச்சி கண்டுள்ளது.
பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்களுக்கான செயல்பாடுகளை புளூம்பெர்க் ஊடகம் ஆய்வுசெய்து அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 12.8 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதேநேரம், உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 11 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது. அதோடு, 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மந்தமான வளர்ச்சியை உள்நாட்டு விமானப் போக்குவரத்து பதிவுசெய்துள்ளது.
நவம்பர் மாதத்தில் மொத்தம் 1.16 கோடிப் பேர் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றனர். 2017ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 1.04 கோடியாக இருந்தது. நவம்பர் மாதம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விமானக் கட்டணங்கள் 21 சதவிகிதம் வரையில் உயர்த்தப்பட்டிருந்தது. இதனால் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மிகப் பெரிய வளர்ச்சியை எட்டவில்லை. சென்ற ஆண்டின் நவம்பர் மாதத்தில் விமானக் கட்டணம் சராசரியாக ரூ.3,910 ஆக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டின் நவம்பரில் அது ரூ.4,728 ஆக உயர்ந்திருந்தது. சர்வதேச விமானப் பயணத்தைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டின் நவம்பர் மாதம் மொத்தம் 21.79 லட்சம் பேர் சர்வதேச விமானப் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றனர். 2017 நவம்பரில் இந்த எண்ணிக்கை 19.31 லட்சமாக இருந்தது.
Discussion about this post