பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்துவந்தாலும் அப்படத்தின் பெயரை படக்குழு வெளியிடாமல் இருந்தது. ‘அஜித் 59’ என்று அழைக்கப்பட்டுவந்த நிலையில் அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஜனவரி மாதம் வெளியான விஸ்வாசம் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்துள்ள நிலையில் அஜித் தற்போது நடித்துவரும் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு நேர்கொண்ட பார்வை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சன், தப்ஸி பன்னு ஆகியோர் இணைந்து நடித்த பிங்க் திரைப்படம் ரசிகர்களிடையேயும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் அமிதாப் ஏற்று நடித்திருந்த வழக்கறிஞர் வேடத்தில் அஜித் நடிக்கிறார். அவரது மனைவியாக வித்யா பாலன் நடிக்கிறார். வித்யா பாலன் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இதுவாகும். தப்ஸி பன்னு நடித்த கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். விளம்பரத் துறையில் இயங்கி வரும் அபிராமி வெங்கடாச்சலம், ஆன்ட்ரியா டரியங் ஆகியோர் உடன் நடிக்கின்றனர்.
த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் வில்லன்களில் ஒருவராக வலம் வருகிறார். அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் இணைந்து நடிக்கின்றனர். அஜித்துடன் இணைந்து பல ஹிட் ஆல்பங்களைக் கொடுத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித், வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்து மற்றொரு படத்தை உருவாக்க உள்ளது.
Discussion about this post