அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், எழுவர் விடுதலை குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 28 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாகியும் ஆளுநர் இதுதொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
மக்களவைத் தேர்தலுக்காக பாஜக – அதிமுக – பாமக ஆகியவை கூட்டணி அமைத்துள்ள நிலையில், கூட்டணிக்கு ராமதாஸ் விதித்த 10 நிபந்தனைகளில் எழுவர் விடுதலையும் ஒன்றாகும். அதிமுக கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நேற்று (மார்ச் 6) சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் நடந்த நிலையில், எழுவர் விடுதலை தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளார் ராமதாஸ்.
கூட்டணிக் கட்சிகள் சார்பில் உரையாற்றிய ஒரே தலைவரான ராமதாஸ், தனது கோரிக்கை மனுவைப் பிரதமரிடம் அளித்த பிறகு தனது உரையை ஆரம்பித்தார்.
அவர் பேசுகையில், “இந்தக் கூட்டணி வெற்றி பெறவில்லை என்று சொன்னால் வேறு எந்தக் கூட்டணியும் வெற்றி பெற முடியாது. தமிழகத்தின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றுதான் இக்கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை கோரிக்கை மனுவாகப் பிரதமரிடம் அளித்துள்ளேன். நிச்சயம் அது நடைபெறும் என்று நாம் நம்புவோம்” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
தொடர்ந்து, “அரசியலமைப்புச் சட்டத்தில் 97 அதிகாரங்கள் மத்திய அரசுக்கும், 66 அதிகாரங்கள் மாநில அரசுக்கு, பொதுப் பட்டியலில் 47 அதிகாரங்களும் இருந்தன. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது கல்வி உள்பட 5 அதிகாரங்களை மாநிலத்திடமிருந்து மத்திய அரசு எடுத்துக்கொண்டது. மேலும் 3 அதிகாரங்களைச் சேர்த்துக் கொண்டது. ஆகவே, மாநிலங்கள் சவலைப் பிள்ளைகளாக இருப்பதை நாம் உணருகிறோம்” என்று பிரதமரிடத்தில் நேரடியாகவே சுட்டிக்காட்டிய ராமதாஸ், தமிழ் உள்பட 22 தேசிய மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக ஆக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Discussion about this post