“நாட்டின் நன்மைக்காக மோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும்” என்று சென்னையில் நேற்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பேசியுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் நேற்று (மார்ச் 6) நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரும் ராமதாஸ், அன்புமணி, கிருஷ்ணசாமி, என்.ரங்கசாமி, ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், தனியரசு, பெஸ்ட் ராமசாமி, பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “நல்ல அரசியலைத் தொடர்ந்திடவும், தீய சக்திகளை விரட்டிடவும் வெற்றிக் கூட்டணியை நாம் அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணியை மக்களுக்கு அறிமுகப்படுத்த தீவிரவாத நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் மோடி தலைமையில் கூடியிருக்கிறோம். இந்த எழுச்சிமிகு கூட்டத்தைப் பார்த்து எதிரிகளுக்கு அடிவயிறு கலங்கியிருக்கும். சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்திருக்கும் சுயநலவாதிகளுக்குச் சப்த நாடிகளும் அடங்கியிருக்கும்” என்று பேசினார்.
“ஜெயலலிதா மறைந்தபோது பிரதமர் நரேந்திர மோடி அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தார். ஜெயலலிதாவிடம் இருந்த நட்பின் காரணமாக மத்திய அரசு நமது துயரத்தில் பங்கு பெற்றது. தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வர வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன முடிவு எடுத்திருப்பாரோ அந்த முடிவைத்தான் நாம் எடுத்திருக்கிறோம். ஜெயலலிதா மீதிருந்த மரியாதை காரணமாகப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு மோடி போயஸ் கார்டனுக்கு வருகை தந்தார். இருவரின் நட்பையும் நேரில் பார்த்தவர்கள் நாங்கள்” என்று குறிப்பிட்ட பன்னீர்செல்வம்,
நாட்டின் நன்மைக்காக உறுதியான நடவடிக்கை எடுத்துவரும் மோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு தங்களது பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்வதற்கே தைரியமில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மதச்சார்பின்மைக்கு ஆபத்து என்பது அரசியல் பச்சோந்திகளின் தவறான பிரச்சாரம். கடந்த நான்கரை ஆண்டுகளில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக எந்தவித சிறு அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும் விளக்கினார்.
இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இந்திய நாட்டை ஆளக்கூடிய தகுதி படைத்த ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான். வலிமைமிக்க பிரதமர் இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பதால்தான் நாம் நிம்மதியாக இருந்து கொண்டிருக்கிறோம். அண்டை நாடுகள் நமக்குப் பல பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன, அதை முறியடிக்க வேண்டுமென்றால் பிரதமராக மோடி வரவேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டார் பிரதமர்” என்று புகழ்ந்தார்.
கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்திய பழனிசாமி, “ஏழை மக்களுக்கு 2,000 ரூபாய் அறிவித்தால், அதைத் தடை செய்ய வேண்டுமென ஸ்டாலின் தனது கட்சிக்காரரை விட்டு வழக்கு போடுகிறார். இவர்கள் எப்படி ஏழை மக்களுக்கு நன்மை செய்வார்கள். மேடையில் வீற்றிருக்கும் அனைத்துத் தலைவர்களும் விவசாயிகள், விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இப்படி இருக்க ஏழை விவசாயிகளுக்கு நன்மை செய்வது குற்றமா? 15 ஆண்டுக்காலம் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக, தமிழகத்துக்கு ஏதாவது நன்மை செய்ததா?” என்று கேள்வியும் எழுப்பினார்.
Discussion about this post