ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் அடங்க மறு.
அரசியல் செல்வாக்கு, அரசு அதிகாரிகள், பணபலம் மிக்க குடும்பங்களின் வாரிசுகள் அப்பாவிப் பெண்களைக் கட்டாயப்படுத்திப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவார்கள். வீடியோ எடுத்து மிரட்டுவார்கள். அந்தக் கொடுமைகளுக்குப் பின் சம்பந்தப்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள். நூற்றுக்கணக்கில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தபோதும் காவல் துறை துணையுடன் அந்தக் குற்றங்கள் மூடி மறைக்கப்படும். இதை கதாநாயகன் ஜெயம் ரவி கண்டுபிடித்து மேலிடத்திலிருந்து வரும் அழுத்தங்களை மீறிக் குற்றவாளிகளை தண்டிப்பார்.
இந்தப் படத்தில் வில்லன்கள் செய்த காரியம்தான் தற்போது பொள்ளாச்சி பாலியல் கொடுமை விவகாரத்திலும் அப்படியே நடந்துள்ளது. இது தமிழகம் முழுவதும் அனைத்துதரப்பிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையைச் சார்ந்தவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்துவருகின்றனர்.
அடங்க மறு படத்தின் இயக்குநர் கார்த்திக் தங்கவேலு, படத்தில் ஜெயம் ரவி பெற்றோர்கள் முன்னிலையிலே குற்றவாளிகளை எரிப்பது போல் தமக்கும் வாய்ப்பு கிடைத்தால் பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில் குற்றமிழைத்தவர்களை உயிருடன் எரிப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வீடியோவில் உள்ள அந்த பெண்ணின் குரல் என்னை மிகவும் துன்புறுத்துகிறது. தாமதப்படுத்தாமல் அவர்களை உடனடியாக தூக்கிலிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி தனது பதிவில், “திரைப்படத்திலோ தனிப்பட்ட என் வாழ்க்கையிலோ என் நிலைப்பாடு ஒரே மாதிரியானதாக இருக்கும். பெண்களையும், குழந்தைகளையும் துன்புறுத்தும் இவர்களுக்கு தண்டனைகள் மிகக் கடுமையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post