வங்கி மோசடியில் சிக்கி நாட்டை விட்டுத் தப்பியோடிய நீரவ் மோடி, ரூ.934 கோடியைத் தனது வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்த மற்றுமொரு மோசடி கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியான ஆவணங்களைக் கொண்டு ரூ.13,500 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பியோடியவர்தான் நீரவ் மோடி. மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான இவர் மீதும் மோசடிக்கு உடந்தையாக இருந்த இவரது உறவினர்கள் மீதும் இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது லண்டனில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அவரது மற்றொரு மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ரூ.934 கோடித் தொகையை நீரவ் மோடி தனது வங்கிக் கணக்கிலும், தனது மனைவியின் இரண்டு கணக்குகளிலும் டெபாசிட் செய்ததாக அமலாக்கத் துறையினர் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இத்தொகையில் ரூ.560 கோடி நீரவ் மோடியின் வங்கிக் கணக்கிலும், ரூ.200 கோடி அவரது மனைவியின் வங்கிக் கணக்கிலும், ரூ.174 கோடி அவரது தந்தையின் வங்கிக் கணக்கிலும் டெபாசிட் ஆகியுள்ளது. இக்கணக்குகள் அனைத்தும் வெளிநாட்டு வங்கிகளைச் சேர்ந்தவையாகும்.
ஏற்கெனவே நீரவ் மோடிக்குச் சொந்தமாக துபாய், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் அமலாக்கத் துறையினரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post