நாடு முழுவதும் உள்ள முதல் வாக்காளர்களைக் கவர பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தில் 98 சதவிகித புதிய வாக்காளர்கள் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த கருத்துக் கணிப்புகளை சி வோட்டர், இந்தியா டுடே உள்ளிட்ட சில ஊடகங்கள் இணைந்து வெளியிட்டு வருகின்றன.
அந்தவகையில், இளைஞர்களின் ஓட்டுப்போடும் ஆர்வம் குறித்து ட்விட்டரில் ‘பவர் ஆப் 18’ என்ற பெயரில் கருத்து கேட்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் 98 சதவிகித இளைஞர்கள் ஓட்டுப் போடுவோம் என்று கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் 8 கோடிக்கும் மேல் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ”தமிழகத்தில் ஜனவரி மாதம் 31ஆம் தேதி முடிய வாக்காளர் பட்டியலில் ஆட்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 18 வயதில் இருந்து 19 வயதுடைய புதிய வாக்காளர்கள் 8 .98 லட்சம் பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை உயரவும் வாய்ப்பு இருக்கிறது” என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ கூறியிருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது இளம் வாக்காளர்களைக் கவரும் வகையில், மீம்ஸ், சமூக வலைதளங்கள் உட்படப் பல சுவாரசியமான வடிவங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு புதிய வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் ஊக்குவித்தது.
இளம் வாக்காளர்களின் பங்களிப்பு குறித்து ஓபிஎன் விளம்பர நிறுவனத்தின் தலைவர் பாலா மணியன் ”கடந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் இளம் வாக்காளர் பட்டியலுக்கும், தேர்தலில் வாக்களித்த இளைஞர்களின் எண்ணிக்கைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது” என மேற்குறிப்பிட்ட தேர்தல் ஆணையத்தின் பிரச்சாரத்தை நினைவுகூர்ந்தார்,
’ரஜினியின் வசனங்கள், 90ஸ் கிட்ஸ் மீம்ஸ், பிரபலங்களின் வீடியோ எனப் பல உத்திகளைத் தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையம் பிரச்சாரம் செய்தது என்று குறிப்பிட்ட பாலா மணியன் இளைஞர்களின் பாதையிலேயே அவர்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் வரவிருக்கும் தேர்தலுக்கும், இளைஞர்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
Discussion about this post