சிம்பு ஒப்பந்தமாகியிருந்த மாநாடு படம் கைவிடப்பட்டதாக எழுந்த செய்திகளுக்குப் படக்குழு விளக்கமளித்துள்ளது.
நடிகர் சிம்பு தனது உடல் எடையைக் குறைப்பதற்காக தற்போது லண்டனில் உள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்துக்காக உடல்ரீதியாக சிம்பு தயாராகி வருகிறார். மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த நிலையில், மாநாடு படம் கைவிடப்பட்டுவிட்டதாக நேற்று (மார்ச் 19) காலையில் சில செய்திகள் வெளியாகின. இதுகுறித்து படக்குழு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், “திட்டமிட்டபடியும், அறிவிக்கப்பட்டபடியும் மாநாடு படம் நிச்சயமாக உருவாகும். படத்துக்குக் கதை எழுதும் பணிகள் முடிந்துவிட்டன. லண்டனிலிருந்து சிம்பு வருவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். சிம்பு வந்தவுடனே படப்பிடிப்பு பணிகள் பற்றி அறிவிப்போம்.
சில படங்களில் நடிப்பதற்கு வெங்கட் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இருவரும் திரும்பிய பிறகு மாநாடு படத்தைத் தொடங்குவோம். நல்ல பொழுதுபோக்கு படமாக மாநாடு இருக்கும். ரசிகர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இது வெங்கட் பிரபுவின் ஒன்பதாவது படமாகும். கடந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதியன்று படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. மேலும், ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ திரைப்படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார்.
Discussion about this post