துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் திருடன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் குற்றாலத்தில் தொடங்கியது. இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் தனுஷ் நடிக்கிறார். அதில், தந்தை கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். மற்றொரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில், மகன் கதாபாத்திரம் ஒரு திருடன் வேடம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குற்றாலத்தில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தனுஷ், சினேகா ஆகியோர் உள்ளடங்கிய காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைக்கின்றனர். ஒளிப்பதிவு பணிகளை வேல்ராஜ் கையாளுகிறார். ஆக்ஷன் கதைக்களம் கொண்ட இந்தப் படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் வசனம் எழுதியுள்ளார். ஏற்கெனவே எதிர்நீச்சல், கொடி ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் துரை செந்தில்குமார் என்பதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. படத்தின் படப்பிடிப்பு பணிகளுடன் வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தின் படப்பிடிப்பு பணிகளிலும் தனுஷ் கலந்துகொள்வார். இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் முடிந்தபிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் இணையவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளது. அதன்பின் மாரி செல்வராஜ், ராம்குமார் ஆகியோர் இயக்கவுள்ள படங்களில் தனுஷ் நடிக்கவுள்ளார்.
Discussion about this post