பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாக, திருநாவுக்கரசிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை நிறைவு செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்டதாகப் புகார் அளித்த பெண்ணின் சகோதரரைத் தாக்கிய வழக்கும் சிபிசிஐடி வசம் உள்ளது.
திருநாவுக்கரசுவின் மீது ஊடகங்களின் பார்வை முழுக்கப் பதிந்திருந்தாலும், அவருடன் சேர்ந்திருந்த இளைஞர்கள் மீதான மக்களின் கவனமும் சற்றும் குலையவில்லை. இதனாலேயே தமிழகம் முழுக்க நடைபெற்றுவரும் போராட்டங்களில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உரிய தண்டனையை விரைவாக வழங்க வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்துவருகின்றன.
சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர், தந்தை கனகராஜ் வசமிருந்த பைனான்ஸ் தொழிலில் முழுதாகக் கால் பதித்தார் திருநாவுக்கரசு. லட்சங்களில் மட்டுமே கடன் வழங்குவது என்றிருந்ததால், அதற்கேற்றவாறு அதனை வசூல் செய்யச் சில இளைஞர்களையும் நியமித்திருந்தார். தற்போது கைதாகியுள்ள வசந்தகுமாரும் திருநாவுக்கரசுவிடம் பணியாற்றியவர்களில் ஒருவர்.
திருநாவுக்கரசுவைப் போலவே, பொள்ளாச்சி பாலியல் புகாரில் அனைவரது மனதிலும் பதிந்தவர் ரிஸ்வந்த் என்ற சபரிராஜன். சில ஆண்டுகளுக்கு முன்னர், இவர் திருநாவுக்கரசுவுக்கு அறிமுகம் ஆனார். பழகிய சில நாட்களிலேயே இருவருக்குமான நட்பு இறுகிப்போனது.
பொள்ளாச்சியிலுள்ள மிகப் பெரிய கட்டட ஒப்பந்ததாரர் ஒருவரது நிறுவனத்தில் மேஸ்திரியாக பணியாற்றிவருகிறார் சபரிராஜனின் தந்தை நாகேஸ்வரன். தனது மகனை ஒரு கட்டட ஒப்பந்ததாரர் ஆக்க வேண்டுமென்பது அவரது கனவு. இதற்காகவே, சபரிராஜனை சிவில் என்ஜினியரிங் படிக்க வைத்தார். ஆனால், அவரோ படிப்பை முடித்ததும் திருநாவுக்கரசுவோடு சேர்ந்துகொண்டார்.
அடிக்கடி விபத்துகள், பிரச்சினைகளில் சிக்குவதும், அது குறித்த வழக்குகளுக்காகக் காவல் நிலையம் செல்வதும் திருநாவுக்கரசுவின் வாடிக்கையாக இருந்துள்ளது. அந்த நேரங்களில் அரசியல் பலமும் ஆள் பலமும் அவருக்குத் துணை நின்றது. அப்படிப்பட்ட பலத்தைத் தந்தவர்களில் ஒருவர் ‘பார்’ நாகராஜ்.
மாக்கினாம்பட்டி ஊராட்சி எல்லையை ஒட்டி, பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது நாகராஜ் வீடு. ஆரம்ப காலத்தில் ஏழ்மையான நிலையில் இருந்தது இவரது குடும்பம். பார் நாகராஜின் தந்தை அதிமுகவைச் சேர்ந்தவராக இருந்தாலும், பெரிதாகப் பொறுப்பு ஏதும் வகிக்கவில்லை. தந்தை வழியில் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட நாகராஜ், அம்மா பேரவையின் 34ஆவது வார்டு செயலாளராகப் பதவி வகித்தவர். பொள்ளாச்சி விவகாரம் பூதாகரமானதையடுத்து, அதிமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
திருநாவுக்கரசுவின் நட்பினால், அவரிடம் பெற்ற பணத்தில் பொள்ளாச்சி வட்டாரத்தில் சுமார் 4 பார்களை வைத்துள்ளார் நாகராஜ். கடந்த வாரம் பொள்ளாச்சி விவகாரம் ஊடகங்களில் பரபரப்பானபோது, நாகராஜின் பார் அடித்து நொறுக்கப்பட்டது. ஆனால், துரித உணவகமொன்று அடித்து நொறுக்கப்பட்டதாகவே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவானது. அந்த நேரத்தில், நொறுக்கப்பட்ட பார் தன்னுடையதல்ல என்று பேட்டியளித்தார் நாகராஜ்.
இதேபோல ஆச்சிப்பட்டி மணி, ஹென்றி பாலு, சுபாகரன், ஜேம்ஸ்ராஜ், கிருஷ்ணராஜ், முருகன் உட்பட சிலர் இவர்களோடு சேர்ந்து சுற்றியுள்ளனர். கடன் கொடுத்தவரிடம் இருந்து பணத்தை வசூல் செய்வதற்காக பல்வேறு வழிகளைக் கையாளுவார் திருநாவுக்கரசு. ஒரு கடன் விவகாரத்தில் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் திருநாவுக்கரசு தவித்தபோது, அவருக்கு ஐடியா தந்துள்ளார் சபரிராஜன். அவருக்கு பெண்களுடன் அதிக அளவில் தொடர்பு உண்டு. அவரது குழுவினருக்கும் இது தெரியும்.
கொடுத்த கடனை வசூல் செய்யும் விதமாக, அந்த வீட்டில் உள்ள பெண்ணைக் கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் சபரிராஜன். அவருடன் இருந்தவர்களும் அதனை ஏற்றுக்கொள்ள, அந்த விபரீதம் சின்னப்பம்பாளையம் வீட்டில் அரங்கேறியது.
Discussion about this post