மக்களவைத் தேர்தலுக்காக திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. சிதம்பரம் தொகுதியில் தனி சின்னத்தில் தான் போட்டியிடவுள்ளதாகவும், விழுப்புரம் தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் திருமாவளவன் அறிவித்தார்.
தேர்தலில் போட்டியிட மோதிரம் சின்னம் தங்களுக்கு வேண்டும் என்று விசிக முறையிட்ட நிலையில், அதை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இதனால் வைரம், பலாப்பழம், டேபிள் உள்ளிட்ட சின்னங்களில் ஒன்றை விசிக கேட்டது. ஆனால் இவற்றில் எதையும் ஒதுக்காத தேர்தல் ஆணையம் வேறொரு சின்னப் பட்டியலைத் தருமாறு விசிகயிடம் கோரியது. இதனால், தனி சின்னம் கேட்டு பிப்ரவரி மாதமே விண்ணப்பித்தும் இதுவரை தங்களுக்குச் சின்னம் ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய திருமாவளவன், “இந்த நிமிடம் வரை சின்னம் ஒதுக்கப்படாததற்கு ஏதேனும் அரசியல் கட்சிகளின் தலையீடு இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னத்தைத் தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 20) ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக திருமாவளவனின் முகநூல் பக்கத்தில், “சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்குத் தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பானை சின்னம் படத்தை மட்டும் பதிவிடவும், பகிரவும், பரப்பவும். மற்ற பானை படங்களைத் தவிர்க்கவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post