தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து அக்கட்சியின் தென்சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கலைராஜன் நீக்கப்பட்டிருக்கிறார். நேற்று (மார்ச் 20) இந்த அறிவிப்பை தினகரன் வெளியிட்டிருக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் அமமுகவின் கரூர் மாசெவாக இருந்த செந்தில் பாலாஜி அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். அவர் இணைந்தபின் அவரை ஒட்டி அமமுகவிலிருந்து நிர்வாகிகள் பலரை திமுகவில் சேர்க்க முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வந்தன. அதேபோல சில நிர்வாகிகள் திமுகவிலும் சேர்ந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்துக்காக திருச்சிக்கு விமானத்தில் புறப்பட்டார். இதையடுத்து கலைராஜனும் திருச்சி சென்றிருக்கிறார். ஸ்டாலின் தங்கியிருந்த சங்கம் ஹோட்டலில் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இந்தத் தகவல் திருச்சியிலேயே இருந்த தினகரனுக்கு உடனடியாகக் கிடைக்க, ‘‘கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்” என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
Discussion about this post