தேர்தல் முடியும் வரை நகர்ப்புறங்களில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தக் கட்சிகளுக்கு அனுமதிக்கக் கூடாது என டிஜிபிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்றன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், தங்கம் போன்றவற்றைத் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து வருகிறது. இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன .
இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால் நகர்ப்புறங்களில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறி நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று (மார்ச் 22) விசாரித்த நீதிமன்றம், தேர்தல் முடியும் வரை நகர்ப்புறங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த அரசியல் கட்சிகளுக்கு அனுமதிக்கக் கூடாது. மைதானங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கலாம் எனத் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் முடியும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
Discussion about this post