தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் வெளியாகிற அன்றே அந்த நடிகருக்கு அகில உலக ரசிகர் மன்றம் சார்பில் போஸ்டர், ப்ளக்ஸ் பேனர்கள் படம் பார்க்க வந்த பார்வையாளன் எண்ணிக்கையை காட்டிலும் அதிகம் ஒட்டப்பட்டிருக்கும்.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலத்தில் அரசியல் காரணங்களுக்காக தொடங்கப்பட்ட இந்தப் பழக்கம், இன்று வரை தமிழ் சினிமாவில் மட்டும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
சினிமாவில் தொடர்ந்து நீடித்திருக்க இது போன்ற சுய விளம்பரங்கள் மூலம் தங்களை மார்கெட் செய்து கொள்ளும் மன வியாதி இன்றைய இளைய நடிகர்களிடம் வேகமாக பரவி வருகிறது.
தியேட்டர்களில் வசூல் ஆகிறதா என்பதை விட 200 பேர் ரீ டிவிட் செய்தால் வரும் ட்ரெண்டிங்கில் தங்கள் படம் இருக்கின்றதா என்கிற மாயவலைக்குள் நடிகர்களும், தயாரிப்பாளர்களும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
தற்போது சென்னை காசி தியேட்டர், கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் அதிகாலை 5 மணி காட்சியில் ரசிகர்களுடன் அமர்ந்து ரிலீஸ் ஆகும் படத்தின் நாயகன் படம் பார்க்கும் பழக்கம் பிரபலமடைந்து வருகிறது.
அதிகாலை காட்சிக்கான தியேட்டரின் மொத்த டிக்கட்டையும் நடிகரின் ரசிகர் மன்றம் மொத்தமாக வாங்கி கொண்டு அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து கிடைக்கும் கூடுதல் பணத்தில் தோரணம், போஸ்டர்களுக்கான செலவுகளை ரசிகர் மன்ற தலைமைகள் செய்து வருகின்றன. இப்படியொரு வாய்ப்பு இல்லாத நடிகர்கள் தங்கள் சொந்த செலவில் இதனை செய்து கொள்கின்றனர்.
இது போன்று நேற்று வெளியான பட்டிபுலம் படத்தில் நடித்துள்ள யோகி பாபு தனக்கும் ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்க விரும்பியிருக்கிறார். கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் நேற்று (மார்ச் 23) காலை பட்டிபுலம் படத்தை யோகி பாபு ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வருகிறார்.
ரோகிணி தியேட்டர் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் யோகி பாபுவின் கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்ய உள்ளதாக ஊடகங்களுக்கு செய்திகள் வந்தன. பின்னர் மாலை 3 மணிக்கு யோகி வருகிறார் என்றனர். கடைசியில் கட் அவுட்டுக்கு தனது ரசிகர்கள் பசும்பால் அபிஷேகம் செய்து உணவுப் பொருளை வீணடிக்க வேண்டாம் என்று யோகி அறிவித்ததால் நிகழ்ச்சி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
24 மணி நேரமாக ஊடகங்களிடம் ஆடு புலி ஆட்டம் நடத்தியதன் பின்னணி பற்றி விசாரித்த போது, தமிழ் சினிமாவில் ரஜினி முதல் புதுமுக நடிகர் நடிக்கும் படம் வரை தனது கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்போதாவது பிற நடிகர்களைப் போல தனக்கும் தியேட்டர்களில் கட் அவுட், பாலாபிஷேகம் போன்ற நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்று ஆசைப்பட்டதால் தியேட்டரில் பட்டி புலம் படத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காட்சி நேரம் அறியாமல் காலைக் காட்சி என அறிவித்துவிட்டனர்.
தியேட்டர் நிர்வாகம் பட்டி புலம் படத்திற்கு ஒதுக்கீடு செய்த காட்சி நேரம் மாலை 3 மணி, 7 மணி. முதல் காட்சியான 4 மணி காட்சிக்கு தயாரிப்பாளர் வாங்கிய குறைந்தபட்ச டிக்கெட்டுக்கு மேல் டிக்கட்டுகள் விற்பனை ஆகவில்லை. ரசிகர்களும் ரெளசு கட்டி கூடவில்லை. இதனால் உணவுப் பொருளை வீணடிக்க வேண்டாம் என்று கூறி நிகழ்ச்சியை யோகி பாபு ரத்து செய்ததாக கூறப்பட்டது. நமக்கு நாமே திட்டத்தில் சரியான திட்டமிடுதல் இல்லாததால் யோகி பாபு முதல் கட்ட முயற்சியில் தோல்வியை சந்தித்திருக்கிறார்.
Discussion about this post