தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று நள்ளிரவு டெல்லியில் வெளியிடப்பட்டது.
இதில் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம்தான் போட்டியிடுகிறார் என்று பேசப்பட்டது. அவர் அங்கே தேர்தல் வேலைகளையும் தொடங்கிவிட்டார். ஆனால் வெளியான பட்டியலில் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாதது சிதம்பரம் ஆதரவாளர்களிடையே கோபத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியே ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்தான் என்ற நிலையில் ப.சி. மகனுக்கு ஏன் சீட் இல்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது,
“நேற்று டெல்லியில் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் பற்றிய இறுதி ஆலோசனை நடந்தபோது சிவகங்கை பற்றியும் பேச்சு வந்திருக்கிறது. அப்போது கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘சுமார் 60 தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்தார். அதைக் கேட்டவுடன் தமிழகத் தலைவர் அழகிரி, ’கர்நாடகத்தில் மல்லிகார்ஜுன கார்கே பையன் உட்பட 10 தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுத்திருக்கிறீர்களே? அந்த அடிப்படையில் சிதம்பரத்தின் மகனுக்கு சீட் வழங்கலாமே?’ என்று கேட்டிருக்கிறார். அப்போது கூட இருந்த ஏ.கே. அந்தோணி , மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் கார்த்திக்கு சீட் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். காங்கிரஸ் கட்சி 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டபோது சிவகங்கையில் கார்த்தி போட்டியிட்டார். அதனால் அவருக்கு சீட் வழங்கலாம் என்று அவர்கள் ராகுல் காந்தியிடம் தெரிவித்தனர்.
மூத்த தலைவர்கள் இதுபற்றி கருத்து தெரிவித்ததால் ராகுல் காந்தி, ‘சரி யோசிக்கலாம். சிவகங்கை தவிர மற்ற தொகுதிகளுக்கு அறிவிப்பு செய்வோம்’ என்று சொல்லிவிட்டாராம்” என்று கூறினார்கள்.
விரைவில் சிவகங்கை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.
Discussion about this post